வியாழன், 3 டிசம்பர், 2009

2009 ஒரு டைரி குறிப்பு

எந்த நேரத்தில் நான் 2008 ஒரு டைரி குறிப்பு எழுதினேன் என்று தெரியவில்லை. அதில் 2008 எனக்கு மிகவும் நல்ல ஆண்டாக அமைந்ததாகவும் நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தது அந்த ஆண்டில் தான் என்றும் குறிப்பிட்டு இருந்தேன். 2009 மிகவும் படுத்தி எடுத்து விட்டது. 2009 ஆரம்பத்தில் எனது மனைவி மற்றும் குழந்தை இந்தியா சென்று விட்டார்கள். இதோ 2009 முடிய போகிறது. வாழ்க்கை வெப் காமெராவில் தான் நடக்கிறது. எனது மகள் அவளது சொப்பு சாமான்களில் maggi பண்ணி அதை வெப் காமெராவில் எனக்கு ஊட்டுகிறாள் . நான் அவுளுக்கு வெப் காமெராவில் கதை சொல்கிறேன். இவ்வளவு பீலிங் பண்றவன் உடன் இந்தியா வந்து வேலை பண்ண வேண்டியது தானே என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. ஒரு IT கம்பெனி யின் "uncertanity" (நிலையற்ற தன்மை) பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் இந்த கேள்வியை நீங்கள் கேட்டு இருக்க மாட்டீர்கள். என்னை விட என் மனைவி தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்க வேண்டும் . ஆனால் ஒரு போதும் இதை அவள் வெளி` காட்டி கொண்டது இல்லை. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவளுடைய உடல் உபாதைகளுக்கு நானும் இந்த மன உளைச்சலும் தான் காரணமோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் சகித்து கொள்கிறாள். இந்த சகிப்பு தன்மை தான் எங்களுடைய உறவை மேம்படுத்துகிறது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மானாக் கடை.
என்ற குறள் நினைவுக்கு வருகிறது.



எனது தாய், தந்தைக்கு சஷ்டியபத்பூர்த்தி என்று சொல்லப்படும் அறுபதாம் கல்யாணம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடையில் விமரிசயாக இந்த ஆண்டு நடந்தது. எனது தாயாருக்கு திருமணம் நடந்தே அதே வீட்டில் வைத்து அறுபதாம் கல்யாணமும் பண்ணி கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உறவினர்கள், தெரிந்தவர்கள் பலர் வந்து இருந்து விசேஷத்தை சிறப்பித்து கொடுத்தனர். இவர்களுக்கு சதாபிஷேகம் பண்ணி வைக்கும் வாய்ப்பையும் கடவுள் எனக்கு அருள வேண்டும். அதற்கான தேக பலத்தையும் ஆரோகியத்தையும் அருளுமாறு சுசீந்தரம் தாணுமாலயனை வேண்டி கொள்கிறேன். சஷ்டியப்தபூர்த்தி என்பது ஒரு மினி கல்யாணம் போல. ஏகப்பட்ட திட்டமிடதலும், உழைப்பும் தேவை. பணம் மூன்றாவது தான். இந்த திட்டமிடுதலையும் உழைப்பையும் எனது மாமா ஏற்று கொண்டார் (கிச்சா மாமா) விசேஷத்தை கல்லிடையில் அவரது ஏற்பாட்டில் நடந்தது. நாங்கள் ஒரு சுற்றலா போல ஜாலியாக இரண்டு பெட்டிகளுடன் கல்லிடை போய் விசேஷத்தை கழித்து கொண்டோம். உழைப்பு முழுவதும் மாமாவுடையது. மாமா ஒரு அறிய மனிதர். இன்று இங்கு நான் உட்பட பெரும்பாலனோர் சுயநலவாதிகளே. ஆனால் அவர் தன் குடும்பம் தன் வேலை என்று பார்க்காமல் எல்லாருக்காகவும் உழைக்க கூடியவர். இன்னும் இருபது வருடம் கழித்து அவரிடம் சென்று எனது பெற்றோர்களின் எண்பதாம் கல்யாணத்தையும் அவர் தான் நடத்தி தரவேண்டும் என்று சொன்னாலும், கொஞ்சமும் தயங்காமல் அவர் "பண்ணி புடுவோம் மாப்ளே" என்று தான் சொல்வார். வாழ்க நீ என் மாமா பல்லாண்டு!.

2008 இன் இறுதியில் விளையாட்டாக நாங்கள் ஆரம்பித்த http://www.subbuskitchen.com/ என்ற சமையல் குறிப்புக்கள் பற்றிய வலைத்தளத்துக்கு 2009 இல் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனது தாயாரின் சமையல் குறிப்புகளை பட்டியல் இடும் முயற்சியாக இதை ஆரம்பித்தோம். இதோ கிட்டத்தட்ட 200 சமையல் குறிப்புகள் சேர்ந்து விட்டது. தினமும் சராசரியாக சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் உலகெங்கிலும் இருந்து இந்த வலைதளத்தை மேய்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று google சொல்கிறது. ஏதோ விளையாட்டாக ஆரம்பித்தாலும் ஏகப்பட்ட உழைப்பை இதில் கொட்டி இருக்கிறோம் . இதற்காக எனது தாயாரையும் மனைவியையும் ரொம்பவே இம்சை படுத்தி இருக்கிறேன். இதே ஆர்வமும் உழைப்பும் 2010 லும் தொடருமானால் கண்டிப்பாக இது எனது தாயாருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுக்கும். T.நகரில் யாராவது எனது தாயாரை அடையாளம் கண்டு கொண்டு .. "ஓ.. நீங்க தான் அந்த சுப்புஸ் கிட்சென் சுப்பு லக்ஷ்மியா ?" என்று விசாரிக்க கூடும். சைட் டிராபிக் எனப்படும் வலை மேய்வோர் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் எனக்கு சொற்ப வருமானமும் கிடைக்கும். 'மெனு ராணி' செல்லம் என்பது போல எதாவது ஒரு அடைமொழி எனது தாயாருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். நல்ல அடைமொழி உங்களுக்கு தோன்றினால் எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியபடுத்தவும். உங்களுக்கு சுப்பலக்ஷிமி கையால் விருந்து சாப்பிடும் அறிய வாய்ப்பு காத்து இருக்கிறது.

எனது மகள் இந்த வருடம் முதல் play school போய் வருகிறாள். அவளுடைய மழலை கேட்க ரொம்ப அழகாக இருக்கிறது. ர,ற இன்னும் வர மறுக்கிறது. "ஆம ஆம ஹஏ ஹஏ" (ராம ராம ஹரே ஹரே) என்று தான் சொல்கிறாள். அம்மா அவளுக்கு செய்வது அத்தனையும் அவள் தன் பொம்மைகளுக்கு பண்ணி இம்சை படுத்துகிறாள்.கேட்டால் Pretend பண்ணி விளையாடுகிறேன் என்று சிரிக்கிறாள். மிரட்டலுக்கு கொஞ்சமும் மசிய மறுக்கிறாள். அன்பாக சொன்னால் போனால் போகட்டும் என்று கேட்டு கொள்கிறாள். எதையும் உடனடியாக உள்வாங்கும் சக்தி இருப்பது தெரிகிறது. 2010 இல் அவளை ஒரு நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும். Long live my baby !.

2008 டைரி குறிப்பில் எனது மாமனாரை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதனால் 2009 லும் அவரை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். அதில் 2008 அவரை ரொம்பவே படுத்தி விட்டது என்று எழுதி இருந்தேன். 2009 அவர்களுக்கு மிக நல்ல வருடமாக தான் இருந்து இருக்க வேண்டும். 2008 இல் அவர்களை படுத்திய வாடகை காரனிடம் இருந்து விடுதலை வாங்கி கொண்டார்கள். பொண்ணும், பேத்தியும் அருகே வந்தார்கள். ஐரோப்பா (சூறாவளி) சுற்று பயணம் போய் வந்தார்கள். அடையாறில் ஒரு பிளாட் வாங்கினார்கள். சந்தோஷமும் துக்கமும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்ற உண்மையை எல்லாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

2009 இன் மற்ற முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்த்து விடுவோம். 2008 இன் பிற்பகுதியில் அமெரிக்காவில் ஆரம்பித்து உலகம் முழுதும் பற்றிக்கொண்ட Recession என்ற பொருளாதார நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக 2009 இல் விலக ஆரம்பித்தது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பாரக் ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டார். ஆப்ரிக்கா அமெரிக்கர்கள் கூட்டம் கூடமாக இதை கொண்டாடினார்கள். பாப் பாடகர் மைக்கல் ஜாக்சன் மரணம் அடைந்தார். இந்தியாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து மன்கோகன் சிங்க் மீண்டும் பிரதமரானார். கலைஞர் அவரது வாரிசுகளுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தார். இந்தியாவில் நேரு குடும்பத்துக்கு பிறகு குடும்ப அரசியலில் சக்கை போடு போடுவது கலைஞர் குடும்பம் தான். மு.க. ஸ்டாலின் பற்றி தின தந்தியில் செய்தி வராத நாளே இல்லை. அவரை பற்றி செய்தி எதுவும் இல்லை என்றாலும் "மு.க ஸ்டாலின் இன்று மெரினாவில் காலையில் நடந்தார்" என்ற செய்தி வந்தது. முதன் முறையாக எனக்கு வோட்டு போடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வழியாக கோலங்கள் இந்த வருட இறுதியில் முடிந்தது. தேவயானியின் ஒப்பாரியை பார்த்து பயந்து எனது மகள் "அம்மா இது நமக்கு வேண்டாம் மா" என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. கோலங்கள் முடிந்தால் என்ன இன்னும் ஒரு குத்து விளக்கு, மாங்கல்யம் என்று ஏதாவது ஒரு பெயரில் மெகா சீரியல் தொடர போகிறது. விடுதலை புலி தலைவர் பிரபாகரனை சிங்கள ராணுவம் சுட்டு கொன்றது. நமது அரசியல் வாதிகள் இதை பற்றி சாமர்த்தியமாக கருத்து வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்தார்கள். கிரிக்கட்டில் சச்சின் தனது சாதனையில் புதிய மைல் கல் எட்டினார். என்ன செய்தும் இந்தியாவின் ஆதார பிரச்சனைகளான் லஞ்சம் ஊழல் கொஞ்சமும் குறைய வில்லை.

முடிந்தால் 2010இல் கீழே உள்ள பட்டியலை முயற்சி செய்து பாருங்கள்.
  1. தொலை காட்சி பார்க்கும் நேர்த்தி குறைத்து கொள்ள முயற்சி செயுங்கள். மெகா சீரியலை தவிர்த்து விடுங்கள். உடம்பிற்கும் மனதிற்கும் கொஞ்சமும் இது நல்லதல்ல.
  2. நல்ல புத்தகங்களை வாங்கி படித்து பாருங்கள்.
  3. குறைந்த பட்ச உடற்பயிற்சிக்கு தயாராகுங்கள். குறைந்தது அரை மணி நேர நடை அவசியம்.
  4. 2010 இல் நல்லதை யோசிப்போம், நல்லதை செய்வோம்.
2010 எல்லோருக்கும் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்.