திங்கள், 27 ஏப்ரல், 2009

தி. நகர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இந்தியா திரும்பிய எனக்கு எனது தாயாருக்கு ஏதாவது நகை வாங்க வேண்டும் என்றும் சரவணா பவனில் டிபன் சாப்பிட வேண்டும் என்றும் ஆசை இருந்தது. இது எல்லா சராசரி இந்தியா குடிமகனுக்கும் உள்ள ஒரு ஆசை தானே?. இந்தியா வந்த அடுத்த நாளே தி.நகர் செல்வது என்று முடிவு ஆகியது. எனது தந்தைக்கு இதில் அவ்வளவாக நாட்டம் இல்லை. "இந்த வெயில்ல எதுக்குடா தி.நகர்? " என்று சிடுசிடுத்தார். "பேசாம வீட்டுல இருக்கறதுக்கு இல்ல" என்றார். உடனே எனது தாயார் "சும்மா இருங்கோ நீங்க..குழந்தை ஆசைப்படறான்" என்று அடக்கினார். பின்ன, இவர் அத்த இத்த சொல்லி நகைக்கு உலை வைக்க பாத்த யாரு தான் பாத்துட்டு சும்மா இருப்பாங்க. சாயங்காலம் நான்கு மணிக்கு கிளம்புவதாக இருந்த நாங்கள் வெயில் காரணமாக ஆறு மணிக்கு தான் கிளம்பினோம். நானும் என் மனைவியும் ஒரு scooty இலும் எனது அம்மா, அப்பா மற்றும் எனது குழந்தை PEP இலும் சென்றோம். எனது மனைவி முன்பே சொன்னாள். "வேண்டாம்.. இங்க மதராஸ்ல நெறய ரோடு எல்லாம் ஒன் வே ஆக்கிட்டாங்க.. நீங்க வண்டி ஒட்டி ரொம்ப நாள் ஆச்சு.. இங்க ரோடு எல்லாம் வேற ரொம்ப மோசம். நான் ஓட்டறேன் நீங்க பின்னாடி ஒக்கந்துகொங்கோ " என்றாள். நான் தான் கேக்கவில்லை. நான் செய்தது மிக பெரிய தவறு என்று மிக விரைவில் புரிந்து கொண்டேன். வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து அண்ணா சாலையில் சேரும் சாலை.

"வேகமா போங்கோ பின்னால ஹோர்ன் அடிக்கறா பாருங்கோ. லெப்ட் இன்டிகாடோர் போட்டுண்டு வேகமா லெப்ட் சைடு போங்கோ. நான் கை காட்டறேன். Rear View Mirror பாத்துண்டு வேகமா அந்த பக்கம் போய்டுங்கோ. " என்றாள்.

"எப்படி வேகமா போக சொல்ற.. ரோடு ரைட்சைடுல இருந்து எப்படி உடன லெப்ட் போக சொல்ற? அந்த பக்கம் வண்டிங்க எல்லாம் எவ்வளவு ஸ்பீடா போறா பாரு.. என்னால எப்படி சட்டுனு போக முடியும் ..? Rear View Mirror வேற அட்ஜஸ்ட் பண்ணிக்கல... எனக்கு ஒரு எழவும் தெரிய மாட்டேங்கறது."

"என்னது.. எனக்கு ஒன்னும் கேக்கல சத்தமா பேசுங்கோ..என்ன சொன்னேள் ?"

"ஆங்.. குழாய்..பேசாம வா.. என்ன டென்ஷன் பண்ணாத" எனக்கு ஒரே எரிச்சலா வந்தது.

"சும்மா என் மேல கோப படாதீங்கோ.. அந்த பக்கம் போங்கோ.. நீங்க வண்டிய என்கிக்ட்ட கொடுங்கோ.. ஒரு வண்டி ஓட்ட லாயக்கு இல்லை என்ன திட்டின்டு"

அப்படி இப்படி சமாளித்து ஒரு வழியாக தி.நகர். பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.

"இந்த சிக்னல்ல ரைட் திரும்பி அப்புறம் லெப்ட் போய் அப்புறம் நாலாவது லெப்ட் திரும்பின அது நேர ஜி.ஆர்.டிக்கு எதிர்ல கொண்டு விடும். அங்க ஜி.ஆர்.டி பார்கிங் இருக்கு. அங்க வண்டிய விட்டுட்டு நாம ஜி.ஆர்.டி போகலாம்." என்றாள்.

எனக்கு கொஞ்சமாக தலை சுற்ற ஆரம்பித்தது. எத்தனையோ வளைவுகளில் திரும்பி ஒடித்து உஸ்மான் சாலை வந்தது. உஸ்மான் சாலையில் ஒரு மேம்பாலம் கட்டி இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் கடல் என்று கேள்வி பட்டு இருக்குக்கிறேன். இப்போது தான் பார்க்கிறேன். எனது அப்பாவின் வண்டியும் வந்து சேர்ந்தது. அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"வளையல் வேணும்னு நான் போன வாரமே கேட்டேன்ல. வேணும்னு சொல்லி இருந்தா நான் பாட்டு நாகர்கோயில் இருந்து வாங்கிண்டு வந்து இருப்பேன்ல.. உனக்கு எல்லாம் தி.நகர்ல தான் நொட்டனும். என்ன டிராபிக், என்ன கூட்டம்.. இதோ இவன் பாட்டு வண்டிய தர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு ஓட்டிண்டு வந்துட்டான். பின்னாடி அப்பா வராளே மெதுவோ போவோம்னு கிடையாது. " என்றுஎரிந்து விழுந்தார்.

"அப்பா, நான் அம்மாவ கூட்டிண்டு ஜி.ஆர்.டி உள்ள போறேன். நீங்களும் அவரும் வண்டிய பார்க் பண்ணிட்டு வந்துடுங்கோ " என்று என் மனைவி சொல்லிவிட்டு அம்மாவை கூட்டிக்கொண்டு போய் விட்டாள்.

நாங்கள் மெதுவாக வண்டிய உருட்டிக்கொண்டு ஜி.ஆர்.டி பார்கிங்க்க்கு சென்றோம். அது கண்டிப்பாக அவ்வளவு பெரிய கடையின் பார்கிங் ஏரியா என்று சொல்ல முடியாது. நெருக்கமாக நிறுத்தினால் ஒரு இருபது வண்டியை நிறுத்தலாம். அவ்வளவு தான். நீங்கள் எதிர் பார்த்தது போல அங்கு எங்கள் வண்டியை நிறுத்த இடம் இல்லை. அங்கு இருந்த செக்யூரிட்டி இடம் "வண்டிய எங்கங்க நிப்பாட்டறது " என்று கேட்டேன்.

"இங்க இடம் இல்லங்க.. கொஞ்சம் தள்ளி அங்கன எங்கனயாவது கொண்டு நிப்பாட்டுங்க" என்று எரிந்து விழுந்தார்.

"நான் ஜி.ஆர்.டி க்கு வந்து இருக்கேங்க.. ஜி.ஆர்.டி வண்டி எல்லாம் இங்க தானே நிப்பாட்டனும். ?" என்றேன்.

"நான் என்ன இல்லானே சொல்லுதேன். இடம் இல்லேங்க. நான் என்ன பண்றது சொல்லுங்க.. அந்த பிரிட்ஜ் க்கு கீழ நிப்பாட்டுங்க" என்றார்.

"அது எங்களுக்கு தெரியாம இல்ல.. அதுவும் புல்ங்க"

"சார், இங்க நிப்பாட்டின யாரவது வந்து வண்டிய எடுத்தா நீங்க வண்டிய நிப்படிக்குடுங்க..இல்லன அங்கன எங்கனயாவது போய் நிப்படிக்குடுங்க. வந்தவுங்க எல்லாம் வண்டிய இங்க போட்டுட்டு ஊர் சுத்த போய்ட்ட நாங்க என்னங்க பண்றது?" என்றார்.

என் அப்பா என்னிடம் "இந்த தி.நகர்க்கு எல்லாம் பேசாம ஆடோல வரணும். இந்த மாதிரி வண்டில வந்த இது தான் பிரச்சனை. எல்லாம் உங்களுக்கு தி.நகர்ல தான் நொட்டனும். தி.நகர தீய வச்சு சுடு" என்று என்னிடம் கோபப்பட்டார்.

நல்ல வேளையாக இரண்டு பேர் வண்டியை எடுக்க எங்களுக்கு எடம் கிடைத்தது. ஜி.ஆர்.டி பார்கிங்க்ல் இடம் கிடைக்க நாங்கள் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்து இருக்க வேண்டும். கடவுள் எங்களிடம் எவ்வளவு பெரிய கருணை காட்டி இருக்கிறார்.வண்டியை பார்க் செய்து விட்டு ஜி.ஆர்.டி இல் நுழைந்தோம். கூட்டம் என்றால் கூட்டம் க்கசக்க கூட்டம். சபாரி அணிந்த இரண்டு மூன்று பேர், "வளையலா ..? 2nd floor சார்.. என்ன கம்மலா .. மூனாவது மாடி " என்று ரெகார்ட் பிளேயர் போல சொல்லி கொண்டு இருந்தார். இங்குள்ள லிப்ட் பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு மிக சிறிய லிப்ட். அதற்க்கு எக்கசக்கமானவர்கள் வைடிங். லிப்ட் வந்தவுடன் சட சடவன மக்கள் முண்டியடித்துக்கொண்டு இடம் பிடிக்கிறார்கள். கை குழைந்தைகள் மிரண்டு அழுகின்றன. அதுவும் ஒவ்வொரு மாடியாக நின்று கடைசியாக ஐந்தாம் மாடிக்கு செல்லும் போது அதில் பயணம் செல்லும் வாடிக்கையாளர் வெறுப்பின் உச்சிக்கே சென்று இருப்பார். நாங்கள் இந்த அனுபவத்திற்கு பயந்து இரெண்டாம் மாடிக்கு மாடிப்படிகள் வழியாகவே சென்றோம்.

எனது மனைவி ஒருவரிடம் சென்று வளையல் குறிப்பு சொல்லி கேட்டார். அவரும் இதை கேட்டு விட்டு "அந்த counterkku போங்க" என்று எங்களை அனுப்பி வைத்தார். அவரும் விவரங்களை கேட்டு விட்டு "அந்த counterkku போங்க"என்றார். எனது மனைவி கோபப்பட்டு "அங்க இருந்து தாங்க இங்க வரோம். அவரு தான் இங்க அனுப்பி வச்சாரு." என்றாள். அவரும் "ஏய். செல்வா ராசு இது உன் section அப்பா.. நீ ஏன் partya இங்க anuppara? என்று சொல்லி விட்டு "madam நீங்க அங்க போங்க madam. அவரு பாத்துப்பாருங்க" என்று அவர் இன்னொரு வாடிக்கையாளரிடம் பிஸி ஆகி விட்டார். நாங்கள் மீண்டு செல்வராசுவிடம் வந்தோம். அவர் எங்களை கொஞ்சம் கூட சட்டை பண்ண வில்லை. அப்பாவிற்கு நல்ல கோபம் வந்து விட்டது. அங்கு ரோந்து (!?) சென்ற ஒரு சபாரி காரரிடம் சென்று "சார்.. உங்க கடைக்கு நகை வாங்க வந்து இருக்கோம் .. இவரு என்னடான அங்க போக சொல்றாரு.. அவரு என்னடான இவர பாக்க சொல்றாரு.. என்னங்க இது ? " என்று கேட்டார். சபாரி காரர் உடனே"ஏம்பா செல்வம், செல்வா ராசு தான் busya இருக்கான்லே? நீ தான் பாரேன். " என்று எங்களை செல்வத்திடம் அனுப்பி வைத்தார். நாட்டமை எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்கியதை நினைத்து நாங்கள் கடவுளுக்கு நன்றி சொன்னோம். ஒரு பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின்பு செல்வம் அவர்கள் எங்களிடம் கருணை காட்டி எங்களுக்கு சில பல வளையல்கள் காட்டினார். எனது தாயாரும் பெரிய மனது பண்ணி ஒரு வளையல் டிசைன்ஐ ஒகே பண்ணி விட்டார். செல்வம் அவர்கள் கிராம் விலை , சேதாரம் மற்றும் இன்ன பிற நம்பெர்களை போட்டு ஒரு தொகை சொன்னார். எனது மனைவி அந்த பேப்பரை கொண்டு சென்று அந்த சபாரிகாரரிடம் கொடுத்து "சார், ஏதாவது கொறைக்க முடியுமா பாருங்க.. நாங்க ரெகுலர் customer சார்" என்றார். அவரும் ஒரு இளிப்பு இளித்துவிட்டு ஏதோ கொஞ்சம் சொச்சத்தை குறைத்து கொடுத்தார். நமக்கும் இப்போது தான் த்ருப்தியாகிறது. நாம் இதற்கு பழகி விட்டோம்.

அடுத்து எனது மனைவி எனது தம்பி கொழந்தைக்கு காதுக்கு கம்மல் வாங்க வேண்டும் என்று எங்களை மூன்றாவது மாடிக்கு அழைத்து சென்றார். அங்கும் ஒரு பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின்பு அந்த பெண் கம்மல்களை காட்டினர். நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து கொண்டு இருந்தேன். எனது பெண்ணும் "அப்பா ஆமுக்கு போலாம்" என்று "சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு " பாணியில் ஆரம்பித்து விட்டாள். நகைக்கு எனது கிரெடிட் கார்டு கொடுத்தேன். "கிரெடிட் கார்டா சார் .. அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் " என்று சொல்லி விட்டு அந்த பெண் பிஸியாகி விட்டாள். ஏற்கனவே நான் இரண்டாம் மாடி செல்வத்திடம் இதே பதிலை கேட்டு இருந்ததால் ஆச்சர்யப்படவில்லை. ஒரு பத்து நிமிடத்திற்கு பின்பு "மேடம் என்னங்க ஆச்சு ?" என்று கேட்டேன். அந்த பெண்ணும் "கோபாலு.. கோபாலு ... "என்று கூப்பிட்டு விட்டு மீண்டும் பிஸியாகி விட்டாள். அந்த பெண்ணிற்கு உடனடியாக சில விட்டமின் மாத்திரைகள் தேவை. அந்த பெண் கூப்பிட்டது எனக்கே காது கேட்க வில்லை. கண்டிப்பாக அந்த கோபாலுக்கு கேட்டு இருக்க சாத்தியம் இல்லை. நான் அந்த பெண்ணிடம் "எங்க போய் கிரெடிட் கார்டு பில் பெ பண்ணனும் சொல்லுங்க.. நான் போய் பண்ணிட்டு வந்துடறேன்." என்றேன். அவளும் எதிர் வரிசையில் உள்ள ஒரு counter காட்டினாள். அங்கு போய் பணம் செலுத்திவிட்டு மீண்டும் அந்த பெண்ணிடம் வந்தேன். "மேடம், நான் பெ பண்ணியாச்சு.. நீங்க கம்மலா கொடுங்க" என்று கேட்டேன். அந்த பெண்ணும் "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், பில் வரணும்" என்றாள். "சொல்லுங்க மேடம்.. எங்க போய் வாங்கனும் சொல்லுங்க.. நான் போய் வாங்கிகிட்டு வந்துடறேன். "என்றேன். "இல்லைங்க சார்.. நீங்க போன கொடுக்க மாட்டங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. கோபாலு .. கோபாலு.. " என்றாள். இந்த முறை கோபாலுக்கு கண்டிப்பா காது கேட்டு இருக்கும்.. அனால் அவன் பிஸி கொஞ்சம் கூட சட்டை பண்ண வில்லை. "ஸோஓஓ .... இப்போவே கண்ணை கட்டுதே..."நானும் பொறுமையாக அந்த பில்லுக்காக காத்து இருந்தேன். ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு.. அந்த பெண்ணிடம் சற்று கோபமாகவே கேட்டேன் "இன்னும்எவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும் சொல்லுங்க". அந்த பெண்ணும் வழக்கம் போல "இருங்க சார். கோபாலு.. கோபாலு.. " என்றாள். எனக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.

ஒரு வழியாக ஜி.ஆர்.டி விட்டு வெளியில் வந்தோம். எனது மனைவி "அம்மா புடவைக்கு ஜாக்கெட் வாங்கனும்.. சென்னை சில்க்ஸ் போகலாம்" என்றாள். நான் முறைத்தேன். எனது மகள் சந்தைக்கு போனும் ஆத்தா வையும் ஆரம்பித்து விட்டாள். எனது அப்பா இன்னும் ஒரு ஜி.ஆர்.டிசபாரி காரரிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தார். எனது அம்மா "ஜாக்கெட் எல்லாம் ஒன்னும் இப்போ வேணாம்.. நாம இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்று சொல்லி எனது வயிற்றில் பாலை வார்த்தாள்.

பசி வேறு வயிற்றை கிள்ள நேராக சரவணா பவன் சென்றோம். உஸ்மான் ரோடு சரவணா பவன் கூட்டமாக இருக்கும் வேண்டாம் என்று சொல்லி பாண்டி பஜார் சரவணா பவன் சென்றோம். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது. "சவுத் இந்தியன், நார்த் இந்தியன் எல்லாம் first floorla இருக்கு. நீங்க மேல போங்க என்று எங்களை மேலே அனுப்பி வைத்தார். அங்கும் ஒரு கூட்டம் waitingla இருந்தது . எங்களிடம் பெயர் மற்றும் எத்தனை பேர் போன்ற விவரங்களை ஒரு கோட்டு சூட்டு ஆசாமி வாங்கி கொண்டார். ஒரு பதினைந்து முதல் அரை மணி நேரம் ஆகும் என்றும் சொன்னார். எனது தந்தை ஏதோ கோபத்தில் முனு முணுத்து கொண்டு இருந்தார். ஒவ்வரு முறை அந்த கோட்டு சூட்டு ஆசாமி கதவை திறந்து கொண்டு வெளியில் வரும் போதும் ஆவலாக அவர் எங்கள் பெயரை சொல்லி கூப்பிடமாடாரா என்று எல்லாரும் எதிர்பார்த்து ஒவ்வரு முறையும் ஏமாந்து போனோம். எனது பெண் இப்பொழுது "அம்மா மம்மம் னேனும் " என்று ஆரம்பித்து விட்டாள். எல்லாருக்கும் கோவம் கோவமாக வந்தது. எவ்வளவு சந்தோஷமாக shopping வந்தோம் .... இப்போது எல்லோரும் கோவில், விரக்தியில், பசியில் ஒட்கார்ந்து கொண்டு இருந்தோம். அந்த கோட்டு சூட்டு ஆசாமி இந்த முறை எனது மனைவி பெயர் சொல்லி எங்களை உள்ளுக்குள் அழைத்தான் . ஆஹா .. சொர்க்க வாசல் கதவு திறந்து விட்டது.அவசரம் அவசரமாக அந்த டேபிள் சுத்தம் செய்து எங்களை அமர சொன்னார்கள். எனது பெண் மீண்டும் சந்தைக்கு போனும் ..ஆத்தா வையும் காசு கொடு .. ஆரம்பித்து விட்டாள். பத்து நிமிடம் ஒருவர் கூட வந்து எங்களை சீண்ட வில்லை. தண்ணீர் கூட வைக்க வில்லை. இப்பொழுது எனது பெண் .."பாட்டி .. செய்யாக்கு(ஸ்ரேயா) மம்மம் னேனும் " என்றதும் எனது அம்மா "ச்சே ..என்னடி இது ..ஒரு கொழந்தைய ஏங்க வச்சிண்டு .. பேசாம நாம ஆத்துக்கு போலாம் .. என்ன பெரிய சரவணா பவன் .. நான் நல்ல பண்ணி போடறேன் .." என்றாள். எனது தந்தை பொறுமை இழந்து விட்டார் .. பின்ன எவ்வளவு நேரம் தான் மற்றவர்கள் சாபிடுவதையும் ஒவ்வரு சர்வர் மூஞ்சியும் பார்ப்பது. ?ஒரு கோட்டு சூட்டு ஆசாமியை கூப்பிட்டு "என்னங்க சார் ..இது .. எவ்வளவு நேரம் ஆச்சு .. ஒரு தண்ணி கூட வைக்க மாட்டீங்களா ? " என்றார் . அந்த நாட்டமையும் உடனடியாக எங்களை கவனிக்கும்மாறு ஒரு தீர்ப்பு வழங்கினார். மெனு card வந்தது .. நான் ஆடி போய் விட்டேன். mini idly - Rs.90, Idly - Rs.40, சாத தோசை - Rs. 60... என்னங்கடா இது .. பகல் கொள்ளையா இருக்கு .. எத்தினி பேரு டா இப்படி கிளம்பி இருக்கேங்க .. ? இது இங்க மட்டும் தானா .. இல்ல எல்லா ஹோட்டல் இதே ரேட் தானா ??ஆனால் இந்த விலை கொடுத்து சாப்பிட இங்க ஒரு பெரிய கியு நிக்கிது ..இந்தியா ஏழை நாடா ? .. அங்க என்னடான gram Rs.1400 கொடுத்து வாங்க பெரிய கூட்டம் இங்க என்னடான .Rs.40 க்கு இட்லி சாப்பிட கூட்டம் .. கண்டிப்பா சொல்றேன் .. recession எல்லாம் இந்தியால இல்லிங்கோ ..

சரி, விழயத்துக்கு வருவோம். கோவணம் முதல் daimond வரை ஏன் எல்லாவற்றிற்கும் நாம் தி.நகர் செல்கிறோம்? எல்லா இடங்களிலும் தான் எல்லா கடைகளும் தான் இருக்கிறதே, பிறகு ஏன் எல்லா இடங்களிலிருந்தும் நாம் தி.நகர் செல்கிறோம். ? அப்படி ஸ்பெஷல் என்ன இருக்கிறது இங்கு ? கூட்டம், கூட்டம், கூட்டம், உங்களால் நிம்மதியாக அங்கு ஷாப்பிங் செய்ய முடிகிறதா ? செரியான லிப்ட் வசதி இல்லை. பாத்ரூம் ரூம் வசதி இல்லை. வாடிக்கயாளராகிய உங்களுக்கு முக்கியத்துவம் அங்கு கிடைக்கிறதா? பத்து மாடி போத்திஸ்இல் உங்களுக்கு செரியான பார்கிங் வசதி கிடைகிறதா? எதிபாராத தீ விபத்து உஸ்மான் ரோட்டில் ஏற்பட்டால் உங்களை வெளியேற்ற அந்தரோடு தயாராக இருக்கிறது என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ?

நான் "தி.நகர் வெறுப்போர் சங்கம் " ஒன்றுஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் நூறு ரூபாய் காசோலை செலுத்தி ஆயுள் கால உறுபினராக சேர்ந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் கீழ்கண்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
1. தி.நகர் செல்வதை முடிந்த வரையிலும் தவிர்க்க வேண்டும்.
2 உங்கள் உறவினர், நண்பர் வட்டங்களிடம், தி.நகரில் கிடைக்கும் அதனையும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகிலும் கிடைக்கும் என்றும் ஷாப்பிங் kku தி.நகர் செல்வைதை thavirkkumaarum கேட்டுக்கொள்ள வேண்டும்.
3 முடிந்தால் அவர்களையும் "தி.நகர் வெறுப்போர் சங்கத்தில் " சேர பரிந்துரை செய்ய வேண்டும்.
4 செரியான பார்கிங் வசதி, லிப்ட், பாத்ரூம் வசதி இல்லாத கடைகளுக்கு போவதை தவிர்க்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் உங்களுக்கு ஒகே தானே ? இருங்கள்.. எனது அப்பா இன்று தி.நகர் சந்தைக்கு(!?) காய்கறி வாங்க செல்கிறார். முதலில் நான் அவரை இந்த காய்கறிகள் வேளச்சேரி இல் கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

சனி, 18 ஏப்ரல், 2009

எனது மேல்நிலை பருவம்

இந்த கட்டுரையை நான் எனது ஆசிரியர்களுக்கு பாத காணிக்கை ஆக்குகிறேன். !!

ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்க பள்ளி, ஆசிராமத்தில் படித்து வந்த நான் ஆறாம் வகுப்புக்காக சுசீந்தரம் S.M.S.M. மேல் நிலை பள்ளிக்கு சென்றேன். அரசு தொடக்க பள்ளி எனது வீட்டில் இருந்து 50 m தொலைவு தான் இருக்கும். தண்ணீர் குடிக்க, சாப்பிட என்று ஒரு நாளைக்கு எப்படியும் மூன்று நான்கு தடவை வீடிற்கு வந்து விடுவேன். ஆனால் இந்த புதிய பள்ளி வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். இந்த பள்ளி ஒரு மேல் நிலை பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இங்கு உண்டு. மிக பெரிய பள்ளி. 1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் இடம். இங்கு அரசு தொடக்க பள்ளியில் கிடைத்த சலுகைகளை எதிர் பார்க்க முடியாது. வீட்டிற்கு மிக அருகில் உள்ள பள்ளிக்கு சென்று வந்த எனக்கு, வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்வது ஒரு புதிய அனுபவம். Uniform போட்டுக்கொள்ள வேண்டும் , கையில் சாப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும் , இப்படி பல புதிய அனுபவங்கள். இந்த புதிய அனுபவத்துக்கு தயாராவதற்கு முன்பே காஞ்சனாவின் பெரியம்மா என்னை கூப்பிட்டு "நாகராஜா, சுசீந்தரம் high school க்கு போக போறியாமே ... பாத்துடா. அங்க உள்ள பயக்கள் எல்லாம் ரொம்ப சப்பட்டை .. நம்மாத்து கணேசன் சாப்பாட்டு மேல மீனை தூக்கி போடரதுகள் , இவனை அப்பள கிச்சன் , அப்பள கிச்சன் நு வட்ட பேர் வச்சு கூப்பிடரதுகள் ..ஒரு நாளைக்கு நான் ஸ்கூல்க்கு போய் நல்லா சண்டை பிடிச்சி விட்டுட்டேன் .. சார பாத்து சொல்லிட்டு வந்து இருக்கேன் .. நம்மாத்து கணேசன், ஒரு பாவம்.. அவன் உண்டு அவன் வேலை இருக்கறவன் .. அவன்கிட்ட போய் வம்பு இழுப்பாளா..அதுனால தான் சொல்றேன் .. நீ ரொம்ப ஜாகிரதையா இருக்கணும்" என்று பயமுறுத்தினாள். பற்றாக்குறைக்கு அப்பள கிச்சன் கணேசன் என்னை கூப்பிட்டு .. "நாகராஜா .. A sectionakku மட்டும் போகாம பாத்துக்கோ .. B க்கு போய்டு அது தான் bestu.. ஏன்னா A க்கு ஜவகர் வருவன் .. சும்மா பிரிச்சு எடுத்துடுவான் .. அடி எல்லாம் முளில தான் ...அதே மாதிரி சின்னம்மை .. அவ அடிக்கமாட்ட .. நல்ல நுள்ளி விடுவா.. அடுத்த நாளைக்கு நல்ல பழுத்துடும்..நான் எவ்வளவு அடி வாங்கி இருக்கேன் தெரியுமா .. அது தான் சொல்றேன் .. A க்கு மட்டும் போகம பாத்துக்கோ .. A க்கு மட்டும் வந்த .. நீ செத்த.." என்று மிரட்டினான். "இதோ பாத்தியா .. இங்கிலீஷ் essay ரெண்டு பக்கத்துக்கு. fulla மனப்பாடம் பண்ணி எழுதணும். ஒம்பதாம் Class வா நீ செத்த " என்றான். இவனிடம் நான் எத்தனை முறை சாக வேண்டும் என்று புரிய வில்லை.

ஸ்கூல் admission கிடைத்தது .. 6 'A' க்கு தான். எனது அப்பா என்னிடம் இருபத்தி மூன்றாவது முறையாக சொன்னார் "ரோடு கிராஸ் பண்றதுக்கு முன்னாடி ரெண்டு பக்கமும் பாக்கணும்.. தூரத்துல வண்டி வரது தெரிஞ்சாலும் நீ கிராஸ் பண்ண கூடாது ..ரெண்டு பக்கமும் வண்டி இல்லன மட்டும் தான் நீ கிராஸ் பண்ணனும். பயக்க சாடுவாங்க.. நீ சாட கூடாது.. மத்யானம் சாப்பாடு முடிஞ்சு சும்மா கிளாஸ் ரூம்ல ஒக்காந்து இருக்கணும் .. ஸ்கூல்க்கு வெளில வர கூடாது .. ஸ்கூல்க்கு வெளில வண்டிங்க தாறு மாற போகும்.. அதுனால ஸ்கூல்க்கு உள்ளேயே தான் இருக்கணும் .. கண்டிப்பா தெப்ப குளம் பக்கத்துல போய்ட கூடாது. பொண்ணுகுட்டிட்ட சொல்லி இருக்கேன்.. டெய்லி பொண்ணுகுட்டி கைய பிடிச்சிண்டு தான் போகணும் .. வரும் போது அவ கைய பிடிச்சிண்டு தான் வரணும்" என்றார். எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டினேன்.

பொண்ணுகுட்டியுடன் தான் (ஆனால் கையை பிடிக்காமல்) தினமும் ஸ்கூல்க்கு சென்று வந்தேன்..ஸ்கூலில் பொண்ணுகுட்டியின் நண்பர்கள் எல்லாம் நான் அவளது தம்பி என்றே நினைத்து விட்டார்கள். ஸ்கூலில் ஏதாவது சண்டை என்றால் கூட நான் அவளிடம் தான் சென்று புகார் சொல்லுவேன். இந்த முறை ஜவஹர் 6A க்கு வரவில்லை என்று தெரிந்து கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். தமிழ்க்கு கோலப்பன் பிள்ளை சார் வந்தார் .. சற்று குள்ளமாக இருப்பார் ..ஆனால் நல்ல வாட்ட சாட்டமாக இருப்பார் . வேட்டி தான் கட்டுவார்..நல்ல கனத்த சரீரம் .. சத்தம் போட்டு பாடம் எடுக்கும் பொழுது நல்ல சாரல் மழை அவர் வாயில் இருந்து அடிக்கும் . "ய ர ல வ ழ ள இடையினம் ... லே .. அங்க என்னல பரக்க பாக்க ...நீ சொல்லு ய ர ல வ ழ ள இடையினம் .... 'ல' இல்லலே .. 'ழ' சொல்லு .. லே நீ டெய்லி நாக்கு வழிப்பயாலே ...எங்க நாக்க காட்டு .. ழ வர மாட்டேங்கு உனக்கு எல்லாம் எதுக்குல high school.. உன் பேரு என்னல .. என்ன அருளா ... என்ன ஊருல உனக்கு .. வ'லு'க்கம்பாரையா?... வழுக்கம்பாறைலே .. ஊரு பேர சொல்ல தெரியல உன்னை எல்லாம் pass ஆக்கி விட்டுட்டான் உங்க schoola..".

அவருக்கு எல்லாரும் அவரை எங்கு பார்த்தாலும் வணக்கம் வைக்க வேண்டும். லேய் .. நீங்க எல்லாம் பெரிய பயக்களாகி நாளைக்கு என்ன பாத்த வணக்கம் வைப்பீங்களாலே .. நேத்திக்கு ஒரு பய்யன பாத்தேன் ..எங்கிட்ட படிச்ச பய தான் .. நேத்து பெருமாள் ஸ்டோர்ல வச்சு பாத்தேன்.. என்ன பாத்து பாக்காதது மாதிரி போறான் .. உங்களுக்கு எல்லாம் நன்றி வேணும்லே மொதேல்ல.. பாத்து வணக்கம் வைச்ச கொறஞ்சா போவான் அவன்.. தொண்ட தண்ணீ வத்த உங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கேன் ..அந்த நன்றி விசுவாசம் வேணும்லே .." என்பார். கோலப்பன் சார்க்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னை வைத்து ஒரு நாடகம் போட்டார் .. அதில் நான் தான் hero. அது ஒரு தனி கதை.

ஏழாம் வகுப்புக்கு ஜவகர் வந்து விட்டார் .. நல்ல உயரம் .. நெத்தியில் முடியை சுருட்டி விட்டு இருப்பார் ...பெரிய குடி கறார் என்பது எனக்கு பிறகு தான் தெரிய வந்தது. கணக்கு படம் எடுத்தார்.

"நாளைக்கு வரும் போது எல்லாரும் 25m வாய்பாடு வரைக்கு படிச்சிட்டு வரணும் .. 25 வாய்பாடு 25 வரைக்கும் .. திடீர்னு கேப்பேன் 13 பெருக்கல் 15 எவ்வளவு .. சொல்லல ..பிரிச்சு எடுத்துடுவேன் .. என்றார்.".. அடடடா .. நாம் பொதுவாக 10 வது வாய்பாடு 10 வரைக்கும் தான் மனப்பாடம் செய்து வைத்து இருப்போம் .. இது என்னடா 25m வாய்பாடு 25 வரைக்கும் ..அதுவும் ஒரு நாளில் .. எல்லாருக்கும் பயம் தொற்றிகொண்டது .. நான் படித்து பார்த்தேன் .. 13 வாய்பாடு தாண்ட முடிய வில்லை .. அடுத்த நாளைக்கு வந்தார் .. வகுப்பே அமைதியாக இருந்தது ..ஒருவனை பார்த்து "லே சொல்லுல 16 பெருக்கல் 7 எவ்வளவுல"? அவன் முழித்தான் ... "இங்க கம்பு எங்கல.. எவம்லே leader இங்க.." தரன் என்ற பயன் எழுந்து "நான் தான் sir.".. "எங்கல கம்பு ..?" "சார் கம்பு உடைஞ்சு போச்சு sir..".."உடைஞ்சு போச்சா ..நாளைக்கு இங்க நல்ல ஒரு கம்பு இருக்கணும் ..இல்ல உன்ன தொரத்தி விட்ருவேன் ..இப்போ 8A ல ஒரு கம்பு இருக்கும் ..அத வாங்கிட்டு வா என்றார் .." அன்று பெரும்பாலும் எல்லாருக்கும் நல்ல அடி விழுந்தது .. அடி என்றால் அடி கையில் இல்லை .. முளில .. அப்பபா .இன்னும் வலிக்கறது ..ஒன்று இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை காணவில்லை .அவருக்கு பதிலாக ஆறுமுகம்பிள்ளை சார் வந்தார் . ஜவகரக்கு ஏதோ பெரிய நோய் என்றும் ஒரு 6 மாதத்திற்கு அவர் school பக்கம் வர மாட்டார் என்றும் கேளிவ்பட்டேன் .. அப்பாடா .. எனது பிரார்த்தனை பலித்து விட்டது.



எட்டாம் வகுப்புக்கு கிளாஸ் சார் ஆறுமுகம் பிள்ளை சார் . மாணவர்களுடன் கிரிக்கெட் பேசுவார், ஈராக் war பற்றி சொல்லுவார். Invention க்கும் Discovery க்கும் உள்ள வித்யாசம் சொல்லுவார். அழகாக board இன் நடுவே ஒரு கோடு பிரித்து ஆங்கில பாட கேள்வி பதில்களை எழுதி போடுவார்.. பொறுமையான மனிதர்.. எப்போதாவது அவர் பொறுமை இழக்கும் போது நன்றாக பிரித்து எடுத்து விடுவார். ஒரு முறை அவரது பொறுமையை சோதித்து நல்ல அடி வாங்கி இருக்கிறேன்.

இவர்களில் குருசாமி சார் பற்றி நான் சொல்லியாக வேண்டும். குருசாமி சார் எங்களுக்கு எட்டாம் வகுப்பில் வரலாறு எடுத்தார். குருசாமி சார்க்கு ஒல்லியான தேகம்..வேட்டி தான் கட்டுவார்..நல்ல முன்வழுக்கை.. நல்ல வேகமாக நடப்பார்.. பசங்களுக்கு இவர் என்றால் கொஞ்சம் பரிகாசம் தான்...

"சார் நீங்க பீடி குடிப்பீங்களா.. ?".

"உனக்கு ஏம்ல அக்கறை .."

"இல்ல சார் .. நீங்க பீடி குடிப்பீங்கனு நம்ம உமா சங்கர் சொல்லுதான் ..அதா சார் கேட்டேன் "

"உன் சோலி என்ன உண்டோ அத பாருல ..காலாண்டு பரிச்சைல எத்தினை பாடத்துலல நீ failu..? மொதேல்ல படிக்கற வழிய பாருல ..எட்டாம் கிளாஸ் பாஸ் ஆகணுமா வேணாமா"?

ஒரு முறை அரையாண்டு தேர்வு நடந்து கொண்டு இருந்த சமயம். தேர்வு சமயத்தில் எங்களை பிரித்து வேறு வகுப்புக்கு அனுப்பி பிற வகுப்பு மாணவர்களுடன் தேர்வு எழுத சொல்லுவார்கள். குருசாமி சார் மதியம் சாப்பாடு முடிந்து வேகமாக சென்று கொண்டு இருந்தார். நான் "குருசாமி" என்று சத்தமாக கூப்பிட்டு விட்டு ஓடி விட்டேன். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து தேர்வு நடக்கும் வகுப்புக்கு வந்தேன். எல்லாரும் "வெங்கடாசலம் குருசாமி சார் பேர் சொல்லி கூப்பிட்டம்லே " என்று பெருமையாக சொன்னார்கள். அடுத்து நாளும் அதே போல் "குருசாமி" என்று சத்தமாக கூபிட்டுவிட்டு ஓடி விட்டேன். வகுப்பில் எனது பெருமை உயர்ந்தது. அடுத்த நாளும் அவர் வரும் போது அதே போல் சத்தமாக அவர் பெயரை கூப்பிட்டு விட்டு வழக்கம் போல் பதினைந்து நிமிடம் கழித்து வந்தேன். வகுப்பு மிகவும் அமைதியாக இருந்தது. குருசாமி சார் எனக்காக காத்து கொண்டு இருந்தார். "அம்பி.. இங்க வா. நீ தானா என்ன பேர் சொல்லி கூப்பிட்டது.. இங்க வா... நாம ஹெட் மாஸ்டர் ரூம்க்கு போலாம்" என்று சொல்லி என் கையை பிடித்து தர தர வென இழுத்து சென்றார். "சார்.. தெரியாம சொல்லிட்டேன் சார்.. மன்னிச்சிருங்க சார்.. உங்க கால்ல வேணும்னாலும் விழுகேன் சார்.. ஹெட் மாஸ்டர் ரூம் வேணாம் சார்.." என்று கெஞ்சினேன். அவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ள வில்லை. ஹெட் மாஸ்டர் ரூமில் ஹெட் மாஸ்டர் இல்லை.

"உன் யோகம்ல .. சார் இல்ல. .நீ இப்படி இந்த பரீக்ச்சை எழுதுகன்னு பாக்கேம்லே.. உனக்கு நான்னா இளக்காரமா போச்சோ.. "

"சார் தெரியாம பண்ணிட்டேன் சார். " என்று அழ ஆரம்பித்தேன். .அப்போது அங்கு காசி முத்து சார் வந்தார். குருசாமி சார் அவரிடம் "அம்பி என் பேர் சொல்லி கூபிடுகான் சார். நானும் சின்ன பயன்னு ரெண்டு நாள் விட்டுட்டேன்.. இவன் என்னடான தலைக்கு மேல ஏறிகிட்டு இருக்கான் .. சார்ட்ட சொல்லி இவன் TC கிழிச்சு கொடுத்துட்டு தான் எனக்கு இன்னிக்கு மறு வேலை." என்றார். காசி முத்து சார் எனக்கு supporttukku வந்தார் . "சார், இவன் நல்ல படிக்க கூடிய பயன் ஆச்சே..எம்லே வெங்கடாசலம், சார் பேர் சொல்லி எம்லே கூப்பிட்ட. " என்று சத்தம் போட்டார் . "சார்.. தெரியாம பண்ணிட்டேன் சார்.. மன்னிச்சு விட்டுருங்க சார்.. இன்னும் கொஞ்ச நேரத்துல பரீக்சை ஆரம்பிச்சுடும் சார்" என்று பெரிதாக அழுதேன். ஒரு வழியாக குருசாமி சார் மனசு இறங்கி வந்து என்னை பரீக்ஷை எழுத அனுப்பி வைத்தார்.

எனக்கு இங்கிலீஷ் மட்டும் பெரும் பிரயத்தனமாக இருந்தது. தமிழில் நல்ல சக்க போடு போட்டு போட்டு வந்த எனக்கு இங்கிலீஷ் மண்டையில் ஏறவே மாட்டேன் என்றது. இன்றும் நான் ஒரு குறளை அலகு பிரித்து நேர் நேர் தேமா, நிறை நேர் புளிமா என்று வாய்பாடு எழுது விடுவேன். மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவது பண்பு தொகை எனப்படும். சுடு காடு, சுடும் காடு, சுடுகின்ற காடு, இது மூன்று காலங்களுக்கும் பொருந்தி வருவதால் சுடு காடு பண்பு தொகை எனப்படும். இன்னும் வினைத்தொகை, ஆகுபெயர் நினைவில் இருக்கிறது. ஆனால் இங்கிலீஷ்க்கு ரொம்ப கழட்ட பட்டேன். "Method மாமா" (சிவதாணு பிள்ளை சார் பட்ட பெயர்) ரொம்ப கழ்டப்பட்டு Direct Speech to Indirect Speech conversion "சொல்லி கொடுத்தார்.

Direct Speech ல இருந்து Indirect ஸ்பீச் மாத்தும் போது "that" போடணும். Apostrophies எடுத்துடனும். பேருக்கு பதிலா "ஹி", "ஷி" போடணும். இந்த மூணு ஸ்டேப் பண்ணினாலே போதும் உங்களுக்கு இரண்டு மார்க் போட்டுடுவான். எனக்கு இந்த மூணு ஸ்டேப் மட்டும் தான் புரிந்தது. நான் கடைசி வரை Direct speech to indirect Speechkku இரண்டு மார்க் தான் வாங்கினேன்.

உங்களுக்கு நான் ஹரி சார் பற்றி சொல்லியாக வேண்டும். ஹரி சார் P T சார். வயது ஐம்பத்து ஐந்து இருக்கும். eppozhudhum தூங்கி வழிவது போல இருப்பார். ஆன்மிகம், தியானம் என்று பேசுவார். கோலப்பன் பிள்ளை சார் போட்ட நாடகத்தில் ஒரு ஆங்கில dialogue எழுதி கொடுத்து என்னை பேசி நடிக்க சொன்னார். நாடகம் முடிந்து பல நாட்கள் ஆகி விட்டது. எப்பொழுது என்னை பார்த்தாலும் என்னை கூபிடுவார்..அந்த சமயத்தில் எந்த சார் போனாலும் அவரை கூப்பிட்டு, "லே.. நம்ம வசனத்தை சொல்லுல" என்பார். நானும் அதை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி காட்டுவேன். "பாத்தீங்களா சார்.. பயனுக்கு இங்கிலீஷ் வரவே இல்லை.. நம்ம ட்ரைனிங் ...இங்கிலிஷ்ல எப்படி polandhu கட்டுகானு பாத்தீங்களா சார்" என்பார். அந்த வாத்தியாரும் "ஆமாம் சார்.. நீங்க பெரிய ஆளு சார்" என்று சொல்லி விட்டு தலயில் அடித்து கொண்டு சொல்லுவார். இது இதோடு நின்று இருந்தால் பரவா இல்ல. ஒரு நாள் வகுப்பிற்கு ஒரு மாணவன் வந்து "சார் வெங்கடாசலம் இந்த கிளாஸ் தானா சார்.. ஹரி சார் கூட்டிட்டு வர சொன்னார் 10A ல சார் இருக்காரு" என்றான். 10A சென்றேன். ஹரி சாரை பார்த்து "வணக்கம் சார்" என்றேன். "இங்க வாலே.. எல்லாருக்கும் சொல்லு.. நீ என்ன பாக்கறதுக்கு முன்னால எப்படி இருந்தே. " என்று கேள்வி கேட்டார். "சார் உங்கள பாக்கறதுக்கு முன்னாடி இங்கிலீஷ் ந எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காம இருந்தது .. நீங்க எனக்கு அந்த இங்கிலீஷ் வசனம் சொல்லி கொடுத்த உடன எனக்கு இங்கிலீஷ் ரொம்ப பிடிச்சு போச்சு.. இப்போ டெய்லி Dictonary பார்த்து 10வார்த்தைக்கு அர்த்தம் படிக்கறேன் சார்." என்று தாறு மாறாக பொய் சொன்னேன். "நம்ம பய்யன பார்த்தீங்களா .. எல்லாம் நம்ம ட்ரைனிங்" என்று பீத்தி கொண்டார் . அவரை பார்க்கும் பொழுது எல்லாம் நான் ஓடி ஒளிந்து கொள்வேன். அப்பொழுதும் நேரடியாக வகுப்புக்கு அழைப்பு வரும். ஒவ்வருவரும் ஒவ்வரு விதம் .. இவர் இப்படி. இன்றும் எனக்கு அந்த வசனம் ஞாபகம் இருக்கிறது.

பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பட்டபெயர்கள் ரொம்பவே வாடிக்கையானது. எனது பள்ளியும் இதற்கு விதிவிலக்கு அல்ல."சூத்துஇல்லா" சுப்பையா, பல்லன், கரடி, அகத்தியன், "loose" மேரி(லூயிஸ் மேரி) , சுண்டுட்டி, methodமாமா என்று ஒரு பெரிய லிஸ்ட் இருக்கிறது. யாரோ ஒரு புண்ணியவான் இது போல பேர் வைத்து விடுகிறான். இந்த பேர் அவர்கள் retired ஆவது வரை நீடிக்கறது.

இன்னும் எத்தனயோ ஆசிரியர்கள், ஆனால் anaivarai பற்றியும் நான் எழுத ஆரம்பித்தால் இது ஒரு நாவலாகி விடும்.. உங்களுக்கும் இது போர் அடித்து விடும். ஆனால் நான் கொஞ்சம் யோசித்து பார்க்கிறேன். இந்த ஆசிர்யர்கள் எல்லோரும் முப்பது, முப்பத்தைந்து வருடங்களாக ஒரே பள்ளியில் வேலை பார்த்தவர்கள். எத்தனை ஆயிரம் மாணவர்களை இவர்கள் பார்த்து இருப்பார்கள். method மாமா எத்தனை ஆயிரம் பேருக்கு Direct Speech to Indirect Speech சொல்லி கொடுத்து இருப்பார்? endha விதமனாக சந்தேகமும் இல்லாமல் இவர்கள் ஒரு ஆலமரம் தான். நம்மை செம்மை படுத்தி நம்மை எதிர்காலத்துக்கு தயார்படுத்தி விடுபவர்கள் இவர்கள் தான். சும்மாவா சொன்னார்கள் மாதா, பிதா, குரு தெய்வம் என்று ?

அடுத்த முறை கோலப்பன் பிள்ளை சார்ஐ பார்க்கும் பொது எனக்கு கொஞ்சம் ஞாபாகம் படுத்துங்கள். அவருக்கு வணக்கம் வைக்க வேண்டும். "Method" மாவிடம் Direct Speech to Indirect ஸ்பீச்இல் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. கேட்கலாம் என்று இருக்கிறேன். குருசாமி சார் இடம் மனபூர்வமாக ஒரு முறை மன்னிப்பு கேட்க வேண்டும் . என்ன சொல்கிறீர்கள் நீங்கள் ?

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

என்னுடைய முதல் அயல் நாட்டு பயணம்

அந்த நாளும் வந்தது.! வெங்கட்டை நெதர்லாந்துக்கு அனுப்பலாம் என்று கம்பெனியில் முடிவாகியது. எனது மனைவி மற்றும் பெற்றோர்களிடம் இதை மிகவும் அடக்கி வாச்கிக்கும் படி கேட்டு கொண்டேன் . ஏன் என்றால் இதற்க்கு முன்பு இரண்டு மூன்று தடவை இது போல அயல் நாடு செல்ல ஏற்பாடாகி பிறகு சில பல காரணங்களால் ரத்தாகி விட்டது. என்னை பார்த்த ஒரு மாமி
"நீ ஆஸ்திரேலியா போறேன்னு சொன்னியே போன வருழம்.. இன்னும் போகலையா இல்ல போயிட்டு வந்திட்டியா ?" என்று கேட்டாள்.
"இல்ல மாமி .. நான் போகல.. நேரம் கூடி வரல போல இருக்கு"
"நீ என்கிட்டே சொன்ன நேரத்துல நடக்க ஆரம்பித்து இருந்தா கூட நீ இந்த நேரம் ஆஸ்திரேலியா போய் இருக்கலாமேடா" என்று நக்கலாக சிரித்தாள்.

நம்மில் பலருக்கு வாய் ரொம்ப அதிகம். பிறருடய தோல்வி அவர்களுக்கு மிகவும் நக்கலாகி விடுகிறது.. அசை போட வசதியாக இருக்கிறது .. அதனால் தான் இந்த முறை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டேன் .. இல்லையென்றால் அடுத்த வருடம் அதே மாமி "ஏன் நீ நேதேர்லண்ட்ஸ் க்கு நடக்கலையா " என்று கேட்க கூடும்.

நெதெர்லாந்து விசா வாங்க முக்கியமாக பிறப்பு சான்றிதழ் தேவை. அட டா .. நமக்கு தான் அப்படி ஒன்னு இல்லவே இல்லியே என்று பிறகு தான் தோன்றியது .. உடனடியாக எனது அம்மா எனது மாமாவை கூப்பிட்டு .. "கிச்சா.. என் பிள்ளையாண்டன் நெதெர்லாந்து போக ஏற்பாடு பண்ணிண்டு இருக்கான் .. நீ தான் எப்படியாவது இவனுக்கு birth certificate வாங்கி கொடுக்கணும் .. நீ தான் கல்லிடைல பெரிய (தலயில் ஐஸ் ) ஆள் ஆச்சே.. ஏற்பாடு பண்ணி கொடுடா " என்றாள்.
"பண்ணி புடுவோம் .. பஞ்சாயத்து ஆபீஸ்ல இருக்கற அதன பயகளும் நம்ம பயக்க தான் .. நீ birth certificate கிடைச்சு ஆச்சுன்னு நினைச்சுக்கோ.." என்று வழக்கம் போல குதுகூலமாக பேசி வைத்தார் .. எனக்கும் நம்பிக்கை நெறைய வந்தது. அடுத்த நாள் போன் வந்தது மாமாவிடமிருந்து
"மாப்ளே ..சிக்கல் மாப்ளே .. இங்க 80 க்கு அப்புறம் உள்ள records மட்டும் தாண்டா இருக்கு .. அதுக்கு முன்னாடி உள்ளது எல்லாம் கரையான் அரிச்சு போச்சாம் டா .. இப்ப நான் ஏதோ courtla மனு போட்டு .. அப்புறம் papper ல எல்லாம் விளம்பரம் கொடுத்து ..என்னன்னவோ பண்ணினா தான் கிடைக்குமாம் .. இது எல்லாம் ஒன்னும் நடக்கற காரியமா தெரியல .. இது இல்லாம ஒன்னும் பண்ண முடியாதா..? "
"மாமா .. இது இல்லமா ஒன்னும் முடியாது .. ரொம்ப கழ்டபட்டு இந்த சான்ஸ் வாங்கி இருக்கேன்.. நீங்க கொஞ்சம் ட்ரை பண்ணினா கண்டிப்பா கிடைக்கும் மாமா , please"
"கொஞ்சம் துட்டு செலவான மாப்ளே .. பரவா இல்லையா .. ஒரு 10 வரைக்கும் ஆகும் .. "
"என்ன.. birth certificatekku 10 ஆயிரமா ..!? பரவா இல்ல மாமா .. பண்ணுங்கோ ..please"
"பண்ணி புடுவோம்.." வழக்கம் போல பேசி வைத்தார்.

ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு வழியாக birth certificate வந்தது. அதை companyidam கொடுத்து triple legalization(!?) வங்கி ஒரு வழியாக workpermit வந்தது. முதலில் நான் மட்டும் செல்வதாகவும் பிறகு 3 மாதத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தை வருவதாகவும் முடிவானது. இதற்க்கு முன்பு எனக்கு நேதேர்லண்ட்ஸ் பற்றி அவ்வளவாக பரிச்சயம் இல்லை . அயல்நாடு என்று பேசும் போது நாம் பொதுவாக அமெரிக்கா, ஆஸ்திரேலயா, இங்கிலாந்து , ஜெர்மனி என்று தான் பேசுவோம். முதன்முறையாக நேதேர்லண்ட்ஸ் பற்றி வலை தளத்தில் (Google ) தேடினேன்.

"நேதேர்லண்ட்ஸ் ரொம்ப cold countryam.. என்னோட friend ஆம்ஸ்டெர்டாம் ல இருக்கான். அவன் சொன்னான்.. கண்டிப்பா ஜெர்கின் வேணும் .. தெர்மல்ஸ் வேணும்.. அப்புறம் sweter இருந்த நல்லது ஏன்னா office குள்ள sweter மட்டும் போட்டுக்கலாம் பாருங்கோ .." இது என் மனைவி
"தெர்மல்ஸ் நா என்ன?.. " இது நான்
"அது அப்படி உடம்போட ஒட்டிண்டு இருக்கும் .. innerskku மேல போட்டுக்கணும் .."
"சரி"
"அப்புறம் சூட் ஒன்னு வாங்கிக்கணும் .. tie உங்க கிட்ட இருக்கு .. இன்னும் வேணும்னா கூட ரெண்டு வங்கிக்கொங்கோ .. client placela neata dress பண்ணிக்கணும் .."
"Tie நாலு இருக்கு போதும்"
"சரி .. நல்லதா 4 pant, 4 shirt, அப்புறம் 7 set inners, sox..இருங்கோ..நான் list போடறேன் .. இல்லன மறந்துடும் "
"சரி..இங்க ஒரு onsite checklistnu ஒன்னு பசங்க வச்சு இருக்காங்க.. அது நாளைக்கு உனக்கு forward பண்றேன்"
"சரி அங்க எங்க தங்குவீங்க ?"
"முதல் 7 days hotela தங்கலாம் .. ஆனா அதுக்கு மேல hotela தங்க முடியாதாம்.. பசங்க கிட்ட கேட்டு இருக்கேன் .. வேற project பசங்க அவங்க ..அவங்க project location வேற .. நான் daily ஒரு 30 mins train travel பண்ணனுமாம் .. வேற வழி இல்ல ..அவங்க கூட தான் தங்கிக்கனும்."
"best அது தான்.. first time போய் எங்க எது கிடைக்கும் , என்ன நு முழிக்க வேணாம் பாருங்கோ .. ஊறுகாய் , வத்தல் , எல்லாம் அம்மா போட்டு வச்சு இருக்கா .. எல்லாம் எடுத்துண்டு போங்கோ .."
"வெறும் 20 kg தான் allowed.. 20 kg check in baggage அப்புறம் 10 kg cabin baggage.. அவ்வளவு தான் allowed.. அதுனால நீ ரொம்ப plan பண்ணதே .. எல்லாத்தையும் எடுத்துண்டு போக முடியாது .."
"யாரு சொன்னா.. எங்க அக்கா கனடா போகும் பொது 30 kg check in baggage கொண்டு போனா .. நல்ல கேட்டு பாருங்கோ .. 20 kgla ஒன்னும் பண்ண முடியாது .. cookera 5 kg வரும் "
"என்னது .. cookera.. ? அது எல்லாம் ஒன்னும் வேணம் .. விட்டா grinder எடுத்துண்டு போக சொல்லுவா போல இருக்கு..?"
"Cooker கண்டிப்பா வேணும் .. dresses எல்லாம் கம்மியா போதும்.. சமையல் அயிட்டம் எல்லாம் எடுத்துண்டு போங்கோ .. dress அங்க போய் கூட வாங்கிக்கலாம் .. நான் ஒரு மாச மளிகை சாமானத்தை pack பண்ணலாம்னு நினச்சிண்டு இருக்கேன் .. நீங்க வேற ..?"
"என்ன மளிகை சாமானமா????? !@#$%^.."கொஞ்சம் தலை சுற்றியது.

Airlines இடம் கெஞ்சி கூத்தாடி special permissionaga 30 kg +10 kg வாங்கியாகிவிட்டது .ஒரு வழியாக "onsite check list" படி packing செய்து விட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 3 தடவை king size பெட்டிய scootiyil வைத்து பக்கத்து அண்ணாச்சி கடையில் wait போட்டு வந்தோம் . குரங்கு அப்பம் பிய்த்த கதை போல.. கொஞ்சம் எடுப்பது .. கொஞ்சம் சேர்ப்பது திரும்ப வெயிட் போடுவது என்று மாறி மாறி நாலாவது முறை 32 kilovil பெட்டியை சீல் வைத்தோம். வேடிக்கை என்னவென்றால் ஒவ்வரு முறயும் நான் எது தேவை எல்லை என்று எடுத்து வைப்பதும் ..எனது தாயாரும் , மனயிவியும் எனக்கு தெரியாமல் பெட்டி உள்ளே ஏதாவது சொருகி வைப்பதும் வாடிக்கையாகி விட்டது.

அயல் நாடு செல்வது பெரிய விழயம் இல்லை ..அதற்கு தயாராவது தான் பெரிய விழயம் . ஒரு வாரமாக ஜவுளி கடை, grand sweets, supermarkets என்று மாறி மாறி ஏறி எறங்கி சோர்ந்து போயாகி விட்டது. பிறகு அம்மாவின் கட்டாயத்தின் பேரில் சொந்தகளுக்கு எல்லாம் கூப்பிட்டு நான் நேதேர்லண்ட்ஸ் போயிட்டு வரேன் என்று எல்லாரிடமும் சொல்லி கொண்டு கிளம்பியாகி விட்டது. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அது ஒரு கார்த்திகை இரவு. Airport செல்ல car வந்தது . கொழந்தை தூங்கி விட்டது . தூளியில் தூங்கும் கொழந்தையை ஒரு முறை பார்த்து விட்டு, சாமியை நமஸ்காரம் செய்தது விட்டு கிளம்பினேன். அப்பாவும் , எனது மனைவியும் என்னுடன் airport வந்தார்கள். எனது நண்பன் கரூர் வெங்கட்ராமனின் முதல் அயல் நாட்டு பயணத்தை கொஞ்சம் நினைத்து பார்க்கிறேன். அவனை துபாய்க்கு அனுப்ப அவனது தாயார், தந்தை, அண்ணா, அண்ணி, அண்ணன் மகள், அக்கா, அக்கா கணவர், அக்காவின் இரண்டு குழந்தைகள் எல்லாரும் ஏர்போர்ட் வந்து இருந்தார்கள். ஏர்போர்ட் கொஞ்ச நேரம் இவர்களை திரும்பி பார்த்ததாக சொல்லி கேள்வி பட்டேன்.

காருக்குள் எனக்கு வியர்த்து கொட்டியது. கண்டிப்பாக பயத்தினால் இல்லை. ஒரு ஜீன்ஸ் சட்டை, அதற்க்கு மேல் ஒரு sweater, அதற்க்கு மேல் ஒரு சூட் , அதற்க்கு மேல் ஜெர்கின் . இதை படிக்கும் போதே உங்களுக்கு வியர்வை வழிவது எனக்கு தெரிகிறது . சென்னையில் இத்தனையும் போட்டு கொண்டு இருக்கும் எனக்கு வியர்வை வழிவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை தானே?. ஏன் இவ்வளவும் போட்டு கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா ..? தயவு செய்து இதை என்னுடைய மனைவியடம் கேளுங்கள் . அவளுடைய ஆலோசனையின் பேரில் தான் இதை செய்தேன். பெட்டியை தான் wait போடுவார்கள் , அதற்க்கு தான் 30 kg restriction, ஆனால் நாம் போட்டு கொண்டு இருக்கும் உடைகளுக்கு restriction எதுவும் கிடையாது .. நான் போட்டு கொண்டு இருக்கும் உடைகளை பெட்டியில் வைத்தால் அதில் இருந்து மிக முக்கியமான ஊறுகாய் பாட்டில், மற்றும் இன்ன பிற சாமான்களை வெளியில் எடுத்தாக வேண்டும் ..ஏன் என்றால் அது ஏற்கனவே 32 kilo(30 kilo thaan allowed). என்னுடைய மனைவியின் friends எல்லாரும் இப்படி தான் செய்வார்களாம் .. 4, 5 சட்டைகள போட்டு கொண்டு தான் பிரயாணம் செய்வார்களாம். உங்களுக்கும் wait restriction இருந்தால் இந்த ஐடியா பின்பற்றுங்கள் ..நான் இன்னும் இந்த ஐடியா விற்கு copyrights வாங்க வில்லை.

Airportil எனது மாமனார் காத்துக் கொண்டு இருந்தார். அவர் indian airlinesl 30 வருடங்களாக வேலை செய்து வருகிறார்..அவருக்கு சில பல சலுகைகள் உண்டு. அவரை நம்பி தான் நான் தைரியமாக 32 kilo பெட்டியுடன் வந்து இருக்கிறேன். ஒரு வழியாக மனைவி மற்றும் அப்பாவிடம் விடை பெற்று airportinul சென்றேன் . மனைவி அழுவது தெரிந்தது.

மனைவி திரும்ப திரும்ப சொன்னபடி அடிக்கடி பாஸ்போர்ட் , டிக்கெட் , deputation லெட்டர் இருக்கிறதா என்று மாறி மாறி பார்த்து கொண்டேன் . Immigraiton வரைக்கும் எனது மாமனார் கூட வந்தார். அவர்க்கும் விடை கொடுத்து immigration முடிந்து flightkkaga காத்து இருந்தேன். flight 2 மணிக்கு தான். தூக்கம் ஒரு புறம் தள்ளியது. மறுபுறம் எனது உடைகளின் எடை தள்ளியது. ஒரு மாதிரி போதையில் நடப்பது போல இருந்து இருக்கும் எனது நடை. AIR FRANCE flight. பாரிஸ் சென்று அங்கிருந்து KLM flight மாறி Amsterdam செல்ல வேண்டும். Flight ஏறியவுடன் முதல் வேலையாக, jerkin(2 kg), Suit (750 g), Sweter(750g) அத்தனையும் கழட்டி மேல திணித்து விட்டு படுத்து தூங்கி விட்டேன். யாரோ எழுப்புவது தெரிந்து முழித்து பார்த்தால் விமான பணிப்பெண் சிரித்துக்கொண்டே ஏதோ சாப்பிட கொடுத்தாள். இந்த அரை தூக்கம் மற்றும் மயக்கத்திலும் நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். விமான பணிப்பெண் களில் இந்தியா பெண்கள் தான் அழகு. (ரொம்ப முக்கியம் இப்போ. ). லூ முட்டிக்கொண்டு வந்து முழித்தேன். விடிந்து விட்டு இருந்தது. இப்பொழுது இந்தியா நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டுமா இல்லை பாரிஸ் நேரத்தை கணக்கில் கொள்ள வேண்டுமா என்று புரிய வில்லை. இப்பொழுது மணி என்ன.. குழப்பமாக இருந்தது. பாத்ரூம் பக்கம் சென்றால் .. ஒரு பெரிய கியூ. என்ன கொடுமை சரவணா.. இந்த விமானங்களில் பாத்ரூம் கியூ ஒரு பெரிய பிரச்னை. ஒரு வழியாக பாரிஸ் வந்து சேர்ந்தேன். நான் பாரிஸ் இறங்கும் போது 4டிகிரி . இங்கிரிந்து இன்னொரு விமானம் மாறி amsterdam வந்து சேர்ந்தேன்.

Amsterdam Airport (Schiphol) மிகவும் பிரமாண்டமாக இருந்தது. ஐரோப்பில் இதுவும் ஒரு முக்கியமான ஏர்போர்ட்.என்னுடைய நண்பனை (நண்பரை!..ஏன் என்றால் அவர் என்னுடைய project manager) வர சொல்லி இருந்தேன். அவர் காத்து கொண்டு இருந்தார். ஏர்போர்ட் க்கு கீழே ரயில்வே ஸ்டேஷன் .. ரயில் கொஞ்ச நேரம் இருட்டில் பிரயாணித்து திடீரென்று வெளிச்சத்துக்கு வந்தது .. அடடா .. மிக அகலமான சாலைகள், மணிக்கு 100 km வேகத்தில் செல்லும் கார்கள், ஒரு பக்கம் ரயில், இன்னொரு பக்கம் திராம், இன்னொரு பக்கம் காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் கார்கள், மிக உயரமான கட்டிடங்கள் என்று எனக்கு வியப்பை ஏற்படுத்தின . இந்த நேரத்தில் நீங்கள் என்னை கூர்ந்து பார்த்து இருந்தால் என்னுடைய வாய் பிளந்து இருப்பதை கவனித்து இருப்பீர்கள்.

4 மணிக்கு ஹோட்டல் வந்து சேர்ந்து விட்டேன். நல்ல படியாக நான் வந்து சேர்ந்து விட்ட சேதியை வீடிற்கு சொல்ல போன் பூத்து ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன். ஒரு போன் அகப்பட்டது.. 1 euro போட்டு பேசினேன் .. என்னுடைய மனைவி தான் எடுத்து பேசினாள். 1 நிமிடம் தான் ..போன் கட் ஆகி விட்டது .. அந்த ஹோட்டல் பணிப்பெண் சிரித்துக்கொண்டே .. "i know its very expensive" என்றாள்.. அட பாவிகளா .. 1 eurona 60 ரூபா .. ஒரு நிமிஷம் தான .. கொள்ளை அடிக்கறாங்க என்று திட்டி கொண்ட ரூம் வந்தேன். ரூம் பிரமாண்டமாக இருந்தது.. பின்ன 4 star ஹோட்டலநா சும்மாவா ?. குடிக்க தண்ணி தேடினேன். என்னடா இது . 4 star ஹோட்டல் .. ஒரு நாளைக்கு 120 euro வாங்கறாங்க .. ஒரு தண்ணி jug வைக்க மாட்டாங்களா என்று reception போன் செய்து தண்ணி எங்கனு கேட்டா ..அந்த பொம்பள "you can purchase the drinking water, but its very expensive.. i would suggest to drink the water from bathroom wash basin tap.." என்றாள் .. அடப்பாவிகளா .. என்று வேறு வழி இல்லாமல் அந்த தண்ணீரை தான் குடித்தேன் .. சும்மா சொல்லகூடாது ..அந்த தண்ணீரும் ரொம்ப நன்றாகவே இருந்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன் இந்த நாட்டில் அந்த தண்ணீர் தான் குடி நீர் என்று.

இதோ.. இங்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஓடி விட்டது. இங்குஇருந்து நான் பல நாடுகளுக்கு சென்று வந்து விட்டேன்.ஆனால் என்ன இருந்தாலும் முதல் அனுபவம் எப்போதும் ஸ்பெஷல் தானே ?. என்னிடம் இன்னும் அந்த onsite checklist இருக்கிறது. உங்களுக்கும் அது வேண்டும் தானே ? கொஞ்சம் செலவாகும் okaya?