திங்கள், 27 ஏப்ரல், 2009

தி. நகர்.

கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இந்தியா திரும்பிய எனக்கு எனது தாயாருக்கு ஏதாவது நகை வாங்க வேண்டும் என்றும் சரவணா பவனில் டிபன் சாப்பிட வேண்டும் என்றும் ஆசை இருந்தது. இது எல்லா சராசரி இந்தியா குடிமகனுக்கும் உள்ள ஒரு ஆசை தானே?. இந்தியா வந்த அடுத்த நாளே தி.நகர் செல்வது என்று முடிவு ஆகியது. எனது தந்தைக்கு இதில் அவ்வளவாக நாட்டம் இல்லை. "இந்த வெயில்ல எதுக்குடா தி.நகர்? " என்று சிடுசிடுத்தார். "பேசாம வீட்டுல இருக்கறதுக்கு இல்ல" என்றார். உடனே எனது தாயார் "சும்மா இருங்கோ நீங்க..குழந்தை ஆசைப்படறான்" என்று அடக்கினார். பின்ன, இவர் அத்த இத்த சொல்லி நகைக்கு உலை வைக்க பாத்த யாரு தான் பாத்துட்டு சும்மா இருப்பாங்க. சாயங்காலம் நான்கு மணிக்கு கிளம்புவதாக இருந்த நாங்கள் வெயில் காரணமாக ஆறு மணிக்கு தான் கிளம்பினோம். நானும் என் மனைவியும் ஒரு scooty இலும் எனது அம்மா, அப்பா மற்றும் எனது குழந்தை PEP இலும் சென்றோம். எனது மனைவி முன்பே சொன்னாள். "வேண்டாம்.. இங்க மதராஸ்ல நெறய ரோடு எல்லாம் ஒன் வே ஆக்கிட்டாங்க.. நீங்க வண்டி ஒட்டி ரொம்ப நாள் ஆச்சு.. இங்க ரோடு எல்லாம் வேற ரொம்ப மோசம். நான் ஓட்டறேன் நீங்க பின்னாடி ஒக்கந்துகொங்கோ " என்றாள். நான் தான் கேக்கவில்லை. நான் செய்தது மிக பெரிய தவறு என்று மிக விரைவில் புரிந்து கொண்டேன். வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து அண்ணா சாலையில் சேரும் சாலை.

"வேகமா போங்கோ பின்னால ஹோர்ன் அடிக்கறா பாருங்கோ. லெப்ட் இன்டிகாடோர் போட்டுண்டு வேகமா லெப்ட் சைடு போங்கோ. நான் கை காட்டறேன். Rear View Mirror பாத்துண்டு வேகமா அந்த பக்கம் போய்டுங்கோ. " என்றாள்.

"எப்படி வேகமா போக சொல்ற.. ரோடு ரைட்சைடுல இருந்து எப்படி உடன லெப்ட் போக சொல்ற? அந்த பக்கம் வண்டிங்க எல்லாம் எவ்வளவு ஸ்பீடா போறா பாரு.. என்னால எப்படி சட்டுனு போக முடியும் ..? Rear View Mirror வேற அட்ஜஸ்ட் பண்ணிக்கல... எனக்கு ஒரு எழவும் தெரிய மாட்டேங்கறது."

"என்னது.. எனக்கு ஒன்னும் கேக்கல சத்தமா பேசுங்கோ..என்ன சொன்னேள் ?"

"ஆங்.. குழாய்..பேசாம வா.. என்ன டென்ஷன் பண்ணாத" எனக்கு ஒரே எரிச்சலா வந்தது.

"சும்மா என் மேல கோப படாதீங்கோ.. அந்த பக்கம் போங்கோ.. நீங்க வண்டிய என்கிக்ட்ட கொடுங்கோ.. ஒரு வண்டி ஓட்ட லாயக்கு இல்லை என்ன திட்டின்டு"

அப்படி இப்படி சமாளித்து ஒரு வழியாக தி.நகர். பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.

"இந்த சிக்னல்ல ரைட் திரும்பி அப்புறம் லெப்ட் போய் அப்புறம் நாலாவது லெப்ட் திரும்பின அது நேர ஜி.ஆர்.டிக்கு எதிர்ல கொண்டு விடும். அங்க ஜி.ஆர்.டி பார்கிங் இருக்கு. அங்க வண்டிய விட்டுட்டு நாம ஜி.ஆர்.டி போகலாம்." என்றாள்.

எனக்கு கொஞ்சமாக தலை சுற்ற ஆரம்பித்தது. எத்தனையோ வளைவுகளில் திரும்பி ஒடித்து உஸ்மான் சாலை வந்தது. உஸ்மான் சாலையில் ஒரு மேம்பாலம் கட்டி இருக்கிறார்கள். மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் கடல் என்று கேள்வி பட்டு இருக்குக்கிறேன். இப்போது தான் பார்க்கிறேன். எனது அப்பாவின் வண்டியும் வந்து சேர்ந்தது. அவரது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"வளையல் வேணும்னு நான் போன வாரமே கேட்டேன்ல. வேணும்னு சொல்லி இருந்தா நான் பாட்டு நாகர்கோயில் இருந்து வாங்கிண்டு வந்து இருப்பேன்ல.. உனக்கு எல்லாம் தி.நகர்ல தான் நொட்டனும். என்ன டிராபிக், என்ன கூட்டம்.. இதோ இவன் பாட்டு வண்டிய தர்ர்ர்ர்ர்ர்ர்ர் நு ஓட்டிண்டு வந்துட்டான். பின்னாடி அப்பா வராளே மெதுவோ போவோம்னு கிடையாது. " என்றுஎரிந்து விழுந்தார்.

"அப்பா, நான் அம்மாவ கூட்டிண்டு ஜி.ஆர்.டி உள்ள போறேன். நீங்களும் அவரும் வண்டிய பார்க் பண்ணிட்டு வந்துடுங்கோ " என்று என் மனைவி சொல்லிவிட்டு அம்மாவை கூட்டிக்கொண்டு போய் விட்டாள்.

நாங்கள் மெதுவாக வண்டிய உருட்டிக்கொண்டு ஜி.ஆர்.டி பார்கிங்க்க்கு சென்றோம். அது கண்டிப்பாக அவ்வளவு பெரிய கடையின் பார்கிங் ஏரியா என்று சொல்ல முடியாது. நெருக்கமாக நிறுத்தினால் ஒரு இருபது வண்டியை நிறுத்தலாம். அவ்வளவு தான். நீங்கள் எதிர் பார்த்தது போல அங்கு எங்கள் வண்டியை நிறுத்த இடம் இல்லை. அங்கு இருந்த செக்யூரிட்டி இடம் "வண்டிய எங்கங்க நிப்பாட்டறது " என்று கேட்டேன்.

"இங்க இடம் இல்லங்க.. கொஞ்சம் தள்ளி அங்கன எங்கனயாவது கொண்டு நிப்பாட்டுங்க" என்று எரிந்து விழுந்தார்.

"நான் ஜி.ஆர்.டி க்கு வந்து இருக்கேங்க.. ஜி.ஆர்.டி வண்டி எல்லாம் இங்க தானே நிப்பாட்டனும். ?" என்றேன்.

"நான் என்ன இல்லானே சொல்லுதேன். இடம் இல்லேங்க. நான் என்ன பண்றது சொல்லுங்க.. அந்த பிரிட்ஜ் க்கு கீழ நிப்பாட்டுங்க" என்றார்.

"அது எங்களுக்கு தெரியாம இல்ல.. அதுவும் புல்ங்க"

"சார், இங்க நிப்பாட்டின யாரவது வந்து வண்டிய எடுத்தா நீங்க வண்டிய நிப்படிக்குடுங்க..இல்லன அங்கன எங்கனயாவது போய் நிப்படிக்குடுங்க. வந்தவுங்க எல்லாம் வண்டிய இங்க போட்டுட்டு ஊர் சுத்த போய்ட்ட நாங்க என்னங்க பண்றது?" என்றார்.

என் அப்பா என்னிடம் "இந்த தி.நகர்க்கு எல்லாம் பேசாம ஆடோல வரணும். இந்த மாதிரி வண்டில வந்த இது தான் பிரச்சனை. எல்லாம் உங்களுக்கு தி.நகர்ல தான் நொட்டனும். தி.நகர தீய வச்சு சுடு" என்று என்னிடம் கோபப்பட்டார்.

நல்ல வேளையாக இரண்டு பேர் வண்டியை எடுக்க எங்களுக்கு எடம் கிடைத்தது. ஜி.ஆர்.டி பார்கிங்க்ல் இடம் கிடைக்க நாங்கள் எவ்வளவு பெரிய பாக்கியம் செய்து இருக்க வேண்டும். கடவுள் எங்களிடம் எவ்வளவு பெரிய கருணை காட்டி இருக்கிறார்.வண்டியை பார்க் செய்து விட்டு ஜி.ஆர்.டி இல் நுழைந்தோம். கூட்டம் என்றால் கூட்டம் க்கசக்க கூட்டம். சபாரி அணிந்த இரண்டு மூன்று பேர், "வளையலா ..? 2nd floor சார்.. என்ன கம்மலா .. மூனாவது மாடி " என்று ரெகார்ட் பிளேயர் போல சொல்லி கொண்டு இருந்தார். இங்குள்ள லிப்ட் பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு மிக சிறிய லிப்ட். அதற்க்கு எக்கசக்கமானவர்கள் வைடிங். லிப்ட் வந்தவுடன் சட சடவன மக்கள் முண்டியடித்துக்கொண்டு இடம் பிடிக்கிறார்கள். கை குழைந்தைகள் மிரண்டு அழுகின்றன. அதுவும் ஒவ்வொரு மாடியாக நின்று கடைசியாக ஐந்தாம் மாடிக்கு செல்லும் போது அதில் பயணம் செல்லும் வாடிக்கையாளர் வெறுப்பின் உச்சிக்கே சென்று இருப்பார். நாங்கள் இந்த அனுபவத்திற்கு பயந்து இரெண்டாம் மாடிக்கு மாடிப்படிகள் வழியாகவே சென்றோம்.

எனது மனைவி ஒருவரிடம் சென்று வளையல் குறிப்பு சொல்லி கேட்டார். அவரும் இதை கேட்டு விட்டு "அந்த counterkku போங்க" என்று எங்களை அனுப்பி வைத்தார். அவரும் விவரங்களை கேட்டு விட்டு "அந்த counterkku போங்க"என்றார். எனது மனைவி கோபப்பட்டு "அங்க இருந்து தாங்க இங்க வரோம். அவரு தான் இங்க அனுப்பி வச்சாரு." என்றாள். அவரும் "ஏய். செல்வா ராசு இது உன் section அப்பா.. நீ ஏன் partya இங்க anuppara? என்று சொல்லி விட்டு "madam நீங்க அங்க போங்க madam. அவரு பாத்துப்பாருங்க" என்று அவர் இன்னொரு வாடிக்கையாளரிடம் பிஸி ஆகி விட்டார். நாங்கள் மீண்டு செல்வராசுவிடம் வந்தோம். அவர் எங்களை கொஞ்சம் கூட சட்டை பண்ண வில்லை. அப்பாவிற்கு நல்ல கோபம் வந்து விட்டது. அங்கு ரோந்து (!?) சென்ற ஒரு சபாரி காரரிடம் சென்று "சார்.. உங்க கடைக்கு நகை வாங்க வந்து இருக்கோம் .. இவரு என்னடான அங்க போக சொல்றாரு.. அவரு என்னடான இவர பாக்க சொல்றாரு.. என்னங்க இது ? " என்று கேட்டார். சபாரி காரர் உடனே"ஏம்பா செல்வம், செல்வா ராசு தான் busya இருக்கான்லே? நீ தான் பாரேன். " என்று எங்களை செல்வத்திடம் அனுப்பி வைத்தார். நாட்டமை எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்கியதை நினைத்து நாங்கள் கடவுளுக்கு நன்றி சொன்னோம். ஒரு பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின்பு செல்வம் அவர்கள் எங்களிடம் கருணை காட்டி எங்களுக்கு சில பல வளையல்கள் காட்டினார். எனது தாயாரும் பெரிய மனது பண்ணி ஒரு வளையல் டிசைன்ஐ ஒகே பண்ணி விட்டார். செல்வம் அவர்கள் கிராம் விலை , சேதாரம் மற்றும் இன்ன பிற நம்பெர்களை போட்டு ஒரு தொகை சொன்னார். எனது மனைவி அந்த பேப்பரை கொண்டு சென்று அந்த சபாரிகாரரிடம் கொடுத்து "சார், ஏதாவது கொறைக்க முடியுமா பாருங்க.. நாங்க ரெகுலர் customer சார்" என்றார். அவரும் ஒரு இளிப்பு இளித்துவிட்டு ஏதோ கொஞ்சம் சொச்சத்தை குறைத்து கொடுத்தார். நமக்கும் இப்போது தான் த்ருப்தியாகிறது. நாம் இதற்கு பழகி விட்டோம்.

அடுத்து எனது மனைவி எனது தம்பி கொழந்தைக்கு காதுக்கு கம்மல் வாங்க வேண்டும் என்று எங்களை மூன்றாவது மாடிக்கு அழைத்து சென்றார். அங்கும் ஒரு பதினைந்து நிமிட காத்திருப்புக்கு பின்பு அந்த பெண் கம்மல்களை காட்டினர். நான் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து கொண்டு இருந்தேன். எனது பெண்ணும் "அப்பா ஆமுக்கு போலாம்" என்று "சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு கொடு " பாணியில் ஆரம்பித்து விட்டாள். நகைக்கு எனது கிரெடிட் கார்டு கொடுத்தேன். "கிரெடிட் கார்டா சார் .. அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார் " என்று சொல்லி விட்டு அந்த பெண் பிஸியாகி விட்டாள். ஏற்கனவே நான் இரண்டாம் மாடி செல்வத்திடம் இதே பதிலை கேட்டு இருந்ததால் ஆச்சர்யப்படவில்லை. ஒரு பத்து நிமிடத்திற்கு பின்பு "மேடம் என்னங்க ஆச்சு ?" என்று கேட்டேன். அந்த பெண்ணும் "கோபாலு.. கோபாலு ... "என்று கூப்பிட்டு விட்டு மீண்டும் பிஸியாகி விட்டாள். அந்த பெண்ணிற்கு உடனடியாக சில விட்டமின் மாத்திரைகள் தேவை. அந்த பெண் கூப்பிட்டது எனக்கே காது கேட்க வில்லை. கண்டிப்பாக அந்த கோபாலுக்கு கேட்டு இருக்க சாத்தியம் இல்லை. நான் அந்த பெண்ணிடம் "எங்க போய் கிரெடிட் கார்டு பில் பெ பண்ணனும் சொல்லுங்க.. நான் போய் பண்ணிட்டு வந்துடறேன்." என்றேன். அவளும் எதிர் வரிசையில் உள்ள ஒரு counter காட்டினாள். அங்கு போய் பணம் செலுத்திவிட்டு மீண்டும் அந்த பெண்ணிடம் வந்தேன். "மேடம், நான் பெ பண்ணியாச்சு.. நீங்க கம்மலா கொடுங்க" என்று கேட்டேன். அந்த பெண்ணும் "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், பில் வரணும்" என்றாள். "சொல்லுங்க மேடம்.. எங்க போய் வாங்கனும் சொல்லுங்க.. நான் போய் வாங்கிகிட்டு வந்துடறேன். "என்றேன். "இல்லைங்க சார்.. நீங்க போன கொடுக்க மாட்டங்க... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. கோபாலு .. கோபாலு.. " என்றாள். இந்த முறை கோபாலுக்கு கண்டிப்பா காது கேட்டு இருக்கும்.. அனால் அவன் பிஸி கொஞ்சம் கூட சட்டை பண்ண வில்லை. "ஸோஓஓ .... இப்போவே கண்ணை கட்டுதே..."நானும் பொறுமையாக அந்த பில்லுக்காக காத்து இருந்தேன். ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு.. அந்த பெண்ணிடம் சற்று கோபமாகவே கேட்டேன் "இன்னும்எவ்வளவு நேரம் வெயிட் பண்ணனும் சொல்லுங்க". அந்த பெண்ணும் வழக்கம் போல "இருங்க சார். கோபாலு.. கோபாலு.. " என்றாள். எனக்கு லேசாக தலை வலிக்க ஆரம்பித்தது.

ஒரு வழியாக ஜி.ஆர்.டி விட்டு வெளியில் வந்தோம். எனது மனைவி "அம்மா புடவைக்கு ஜாக்கெட் வாங்கனும்.. சென்னை சில்க்ஸ் போகலாம்" என்றாள். நான் முறைத்தேன். எனது மகள் சந்தைக்கு போனும் ஆத்தா வையும் ஆரம்பித்து விட்டாள். எனது அப்பா இன்னும் ஒரு ஜி.ஆர்.டிசபாரி காரரிடம் சண்டை போட்டு கொண்டு இருந்தார். எனது அம்மா "ஜாக்கெட் எல்லாம் ஒன்னும் இப்போ வேணாம்.. நாம இன்னொரு நாள் பாத்துக்கலாம்" என்று சொல்லி எனது வயிற்றில் பாலை வார்த்தாள்.

பசி வேறு வயிற்றை கிள்ள நேராக சரவணா பவன் சென்றோம். உஸ்மான் ரோடு சரவணா பவன் கூட்டமாக இருக்கும் வேண்டாம் என்று சொல்லி பாண்டி பஜார் சரவணா பவன் சென்றோம். அங்கும் கூட்டம் நிரம்பி வழிந்தது. "சவுத் இந்தியன், நார்த் இந்தியன் எல்லாம் first floorla இருக்கு. நீங்க மேல போங்க என்று எங்களை மேலே அனுப்பி வைத்தார். அங்கும் ஒரு கூட்டம் waitingla இருந்தது . எங்களிடம் பெயர் மற்றும் எத்தனை பேர் போன்ற விவரங்களை ஒரு கோட்டு சூட்டு ஆசாமி வாங்கி கொண்டார். ஒரு பதினைந்து முதல் அரை மணி நேரம் ஆகும் என்றும் சொன்னார். எனது தந்தை ஏதோ கோபத்தில் முனு முணுத்து கொண்டு இருந்தார். ஒவ்வரு முறை அந்த கோட்டு சூட்டு ஆசாமி கதவை திறந்து கொண்டு வெளியில் வரும் போதும் ஆவலாக அவர் எங்கள் பெயரை சொல்லி கூப்பிடமாடாரா என்று எல்லாரும் எதிர்பார்த்து ஒவ்வரு முறையும் ஏமாந்து போனோம். எனது பெண் இப்பொழுது "அம்மா மம்மம் னேனும் " என்று ஆரம்பித்து விட்டாள். எல்லாருக்கும் கோவம் கோவமாக வந்தது. எவ்வளவு சந்தோஷமாக shopping வந்தோம் .... இப்போது எல்லோரும் கோவில், விரக்தியில், பசியில் ஒட்கார்ந்து கொண்டு இருந்தோம். அந்த கோட்டு சூட்டு ஆசாமி இந்த முறை எனது மனைவி பெயர் சொல்லி எங்களை உள்ளுக்குள் அழைத்தான் . ஆஹா .. சொர்க்க வாசல் கதவு திறந்து விட்டது.அவசரம் அவசரமாக அந்த டேபிள் சுத்தம் செய்து எங்களை அமர சொன்னார்கள். எனது பெண் மீண்டும் சந்தைக்கு போனும் ..ஆத்தா வையும் காசு கொடு .. ஆரம்பித்து விட்டாள். பத்து நிமிடம் ஒருவர் கூட வந்து எங்களை சீண்ட வில்லை. தண்ணீர் கூட வைக்க வில்லை. இப்பொழுது எனது பெண் .."பாட்டி .. செய்யாக்கு(ஸ்ரேயா) மம்மம் னேனும் " என்றதும் எனது அம்மா "ச்சே ..என்னடி இது ..ஒரு கொழந்தைய ஏங்க வச்சிண்டு .. பேசாம நாம ஆத்துக்கு போலாம் .. என்ன பெரிய சரவணா பவன் .. நான் நல்ல பண்ணி போடறேன் .." என்றாள். எனது தந்தை பொறுமை இழந்து விட்டார் .. பின்ன எவ்வளவு நேரம் தான் மற்றவர்கள் சாபிடுவதையும் ஒவ்வரு சர்வர் மூஞ்சியும் பார்ப்பது. ?ஒரு கோட்டு சூட்டு ஆசாமியை கூப்பிட்டு "என்னங்க சார் ..இது .. எவ்வளவு நேரம் ஆச்சு .. ஒரு தண்ணி கூட வைக்க மாட்டீங்களா ? " என்றார் . அந்த நாட்டமையும் உடனடியாக எங்களை கவனிக்கும்மாறு ஒரு தீர்ப்பு வழங்கினார். மெனு card வந்தது .. நான் ஆடி போய் விட்டேன். mini idly - Rs.90, Idly - Rs.40, சாத தோசை - Rs. 60... என்னங்கடா இது .. பகல் கொள்ளையா இருக்கு .. எத்தினி பேரு டா இப்படி கிளம்பி இருக்கேங்க .. ? இது இங்க மட்டும் தானா .. இல்ல எல்லா ஹோட்டல் இதே ரேட் தானா ??ஆனால் இந்த விலை கொடுத்து சாப்பிட இங்க ஒரு பெரிய கியு நிக்கிது ..இந்தியா ஏழை நாடா ? .. அங்க என்னடான gram Rs.1400 கொடுத்து வாங்க பெரிய கூட்டம் இங்க என்னடான .Rs.40 க்கு இட்லி சாப்பிட கூட்டம் .. கண்டிப்பா சொல்றேன் .. recession எல்லாம் இந்தியால இல்லிங்கோ ..

சரி, விழயத்துக்கு வருவோம். கோவணம் முதல் daimond வரை ஏன் எல்லாவற்றிற்கும் நாம் தி.நகர் செல்கிறோம்? எல்லா இடங்களிலும் தான் எல்லா கடைகளும் தான் இருக்கிறதே, பிறகு ஏன் எல்லா இடங்களிலிருந்தும் நாம் தி.நகர் செல்கிறோம். ? அப்படி ஸ்பெஷல் என்ன இருக்கிறது இங்கு ? கூட்டம், கூட்டம், கூட்டம், உங்களால் நிம்மதியாக அங்கு ஷாப்பிங் செய்ய முடிகிறதா ? செரியான லிப்ட் வசதி இல்லை. பாத்ரூம் ரூம் வசதி இல்லை. வாடிக்கயாளராகிய உங்களுக்கு முக்கியத்துவம் அங்கு கிடைக்கிறதா? பத்து மாடி போத்திஸ்இல் உங்களுக்கு செரியான பார்கிங் வசதி கிடைகிறதா? எதிபாராத தீ விபத்து உஸ்மான் ரோட்டில் ஏற்பட்டால் உங்களை வெளியேற்ற அந்தரோடு தயாராக இருக்கிறது என்று உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ?

நான் "தி.நகர் வெறுப்போர் சங்கம் " ஒன்றுஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் நூறு ரூபாய் காசோலை செலுத்தி ஆயுள் கால உறுபினராக சேர்ந்து கொள்ளலாம். ஆனால் நீங்கள் கீழ்கண்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
1. தி.நகர் செல்வதை முடிந்த வரையிலும் தவிர்க்க வேண்டும்.
2 உங்கள் உறவினர், நண்பர் வட்டங்களிடம், தி.நகரில் கிடைக்கும் அதனையும் அவரவர் வசிக்கும் இடங்களுக்கு அருகிலும் கிடைக்கும் என்றும் ஷாப்பிங் kku தி.நகர் செல்வைதை thavirkkumaarum கேட்டுக்கொள்ள வேண்டும்.
3 முடிந்தால் அவர்களையும் "தி.நகர் வெறுப்போர் சங்கத்தில் " சேர பரிந்துரை செய்ய வேண்டும்.
4 செரியான பார்கிங் வசதி, லிப்ட், பாத்ரூம் வசதி இல்லாத கடைகளுக்கு போவதை தவிர்க்க வேண்டும்.

இந்த விதிமுறைகள் உங்களுக்கு ஒகே தானே ? இருங்கள்.. எனது அப்பா இன்று தி.நகர் சந்தைக்கு(!?) காய்கறி வாங்க செல்கிறார். முதலில் நான் அவரை இந்த காய்கறிகள் வேளச்சேரி இல் கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும்.

2 கருத்துகள்:

Blogger யாத்ரீகன் கூறியது…

felt like i went and came back to t.nagar once :-) .. been once a residant of t.nagar (just beside the renganathan st) , i love the sprit illaya pinney ivlo complain-aiyum meeri makkal varangaley ;-)

8 மே, 2009 அன்று PM 2:13  
Blogger Ramya கூறியது…

'kovalu kovalu' dhan ulti po. Ur demands are to high to join Tnagar verupor sangam'

11 மே, 2009 அன்று AM 10:11  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு